/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஷன் கடை, பார்களில் கவுன்சிலர், கட்சியினர் வசூலில் நீயா... நானா...போட்டி ; மதுரையில் நடைபெறும் 'வேட்டை'யால் மோதல் அபாயம்

ADDED : ஏப் 02, 2025 03:26 AM

மதுரை: மதுரை நகரில் ரேஷன் கடைகள், டாஸ்மாக் பார்களில் வசூல் வேட்டை நடத்துவதில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் - வட்டச் செயலாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால் மோதல் சம்பவங்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள், பார்கள் செயல்படுகின்றன. மொத்தமுள்ள 100 மாநகராட்சி வார்டுகளில் 67 தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். பழைய 72 நகர் வார்டுகளில் 40க்கும் மேற்பட்ட தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். இவ்வார்டுகளில் தான் பெரும்பாலும் கவுன்சிலர்கள் - வட்ட செயலாளர்களுக்கு இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.
குறிப்பாக பணிகள் தொடர்பாக டெண்டர் எடுப்பது, ரேஷன் கடைகள், பார்களில் வசூல் வேட்டை நடத்துவது போன்றவற்றில் இவர்களுக்குள் கடும் போட்டி ஏற்படுகிறது. (சில நேர்மையான கவுன்சிலர், வட்டச் செயலாளர்கள் இதுபோன்றவற்றில் ஈடுபடுவதில்லை). குறிப்பாக வடக்கு தொகுதியில் உள்ள பல வார்டுகளில் இவர்கள் முட்டி, மோதிக்கொள்கின்றனர். சில வார்டுகளில் பெண் கவுன்சிலர்களின் கணவர் 'தொல்லை'யும் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக போலீஸ் ஸ்டேஷன்கள் வரை 'பஞ்சாயத்து' செல்கின்றன. புகார் செய்யும் நிலையில் ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகிகள் தலையிட்டு பேசி தீர்த்து வைக்கின்றனர். சமீபத்தில் புதுார் பகுதியில் உள்ள வார்டில் கவுன்சிலர் - வட்டச் செயலாளர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து புகாராகி விசாரணையில் உள்ளது.
இதுகுறித்து சீனியர் தி.மு.க.,வினர் சிலர் கூறியதாவது: ஆளுங்கட்சி சார்பில் மக்களுக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை என பல சலுகைகள் அளித்து முதல்வருக்கு நற்பெயர் கிடைத்துவரும் நிலையில், இதுபோன்ற செயல்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். ஒரு ரேஷன் கடையில் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையும், பார்களில் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும் வசூல் நடக்கிறது. கடைகள் எண்ணிக்கையை பொறுத்து, யார் எத்தனை கடைகளில் வசூலிப்பது என்பதில் மோதல் ஆரம்பிக்கிறது. இது ஆளுங்கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும். சென்னையில் சில கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் மதுரையிலும் தி.மு.க., தலைமை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.