/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிருதுமால் நதியில் அடைப்பால் குடியிருப்போர் அவதி; மதுரையில் தொடர் மழையால் பாதிப்பு
/
கிருதுமால் நதியில் அடைப்பால் குடியிருப்போர் அவதி; மதுரையில் தொடர் மழையால் பாதிப்பு
கிருதுமால் நதியில் அடைப்பால் குடியிருப்போர் அவதி; மதுரையில் தொடர் மழையால் பாதிப்பு
கிருதுமால் நதியில் அடைப்பால் குடியிருப்போர் அவதி; மதுரையில் தொடர் மழையால் பாதிப்பு
ADDED : டிச 16, 2024 05:58 AM

மதுரை : மதுரையில் 3 நாட்களாக பெய்த மழையால் கிருதுமால் நதி தண்ணீர் வெளியேறி, தானதவம், ராகவேந்திர நகர், பொன்மேனி பகுதி வீடுகளை சூழ்ந்ததால் குடியிருப்போர் பாதிக்கப்பட்டனர்.
வடகிழக்கு பருவமழை சீசனையொட்டி மதுரையில் 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்தது. வயல்வெளிகளில் தேங்கிய மழைநீர் வைகையில் கூடுதல் வெள்ளமாக பாய்ந்தது. கிராமங்களில் கண்மாய், குளங்களுக்கும் தண்ணீர் வரத்து இருந்தது. மதுரை நகருக்குள் ரோட்டில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் குண்டு, குழி ரோடுகளில் விபத்தை சந்தித்தன. அரசரடி ரோடு, ஜம்புரோபுரம் பகுதி, அண்ணா பஸ்ஸ்டாண்ட், தெற்குவாசல் பகுதி என பல ரோடுகள் வாகனங்களை படுத்தி எடுத்தன.
தொடர் மழையால் மாடக்குளம் பகுதி வயல்வெளி தண்ணீர் கிருதுமால் நதியில் வெளியேறியது. வழியில் தானதவம், புதுார், பொன்மேனி பகுதியில் சிறு பாலங்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வயல்வெளிகள், வீடுகளைச் சூழ்ந்து நின்றது.
ராகவேந்திர நகர், மாடக்குளம் மெயின்ரோடு பகுதி வீடுகள் முன்பு முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியதால் குடியிருப்போரால் வெளியேற முடியவில்லை. பத்து மணிநேரத்திற்கும் மேலாக தேங்கி நின்றதால் விஷஜந்துகள் வீடுகளுக்குள் புகுந்தன. இதனால் மக்கள் அச்சத்துடன் பொழுதைக் கழித்தனர்.
மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவிசெயற்பொறியாளர் முத்து, உதவிப் பொறியாளர் ரகுநாதன் அப்பகுதியை ஆய்வு செய்தனர். கிருதுமால் நகர், ஜெ.பி.நகருக்கு இடையே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதை கண்டறிந்தனர். மணல் மூடைகளை அடுக்கி நடவடிக்கை எடுத்தனர். இப்பணிகளை கமிஷனர் தினேஷ்குமார் பார்வையிட்டு, கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்பு செடி, கொடிகளை அகற்ற உத்தரவிட்டார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஒரு வாரத்திற்கு முன்பே கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற இயந்திரங்களுடன் ஊழியர்கள் வந்தனர். இதையறிந்த பொதுப்பணித் துறையினர், ''இக்கால்வாயை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி துவங்கும். எனவே மாநகராட்சியினர் எந்தப் பணியையும் மேற்கொள்ள வேண்டாம் என கடிதம் அளித்ததால் நாங்கள் ஒதுங்கிக் கொண்டோம்'' என்றனர்.
ஆய்வின்போது இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கமிஷனர் தினேஷ்குமார் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதற்கிடையே அப்பகுதியில் மாநகராட்சி, தானதவம் புதுார் பகுதியினர் அவரவர் செலவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

