/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சந்திப்பு பகுதியில் ரோடு விரிவாக்கம் தாமதமேனோ
/
சந்திப்பு பகுதியில் ரோடு விரிவாக்கம் தாமதமேனோ
ADDED : மார் 24, 2025 05:25 AM
மதுரை: மதுரையில் அழகர்கோவில் ரோட்டின் சந்திப்பு பகுதிகளில் வாகன போக்குவரத்தை எளிமைப்படுத்த விரிவாக்கம் செய்யும் பணிகள் சுணங்குவது ஏனென்று தெரியவில்லை.
மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண மேம்பாலங்கள் பல கட்டப்பட்டு வருகின்றன. அதேநேரம் அழகர்கோயில் ரோட்டின் சந்திப்பு பகுதிகளில் வாகனங்கள் எளிதாக திரும்பிச் செல்லும் வகையில் ரோட்டை விரிவாக்கம் செய்ய துவங்கிய பணிகள் முடங்கிவிட்டன.
இந்த ரோட்டில் ரேஸ்கோர்ஸ் ரோடு சந்திப்பு பகுதியிலும், அம்பேத்கர் சிலையின் அருகேயும் சந்திப்பில் பெரியஅளவில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. அதற்கான பணிகள் தாமதமான நிலையில், குறைந்தபட்சம் சந்திப்பில் வாகனங்கள் எளிதாக திரும்பிச் செல்ல வழிசெய்வது என முடிவெடுத்தனர்.
இதற்காக ரேஸ்கோர்ஸ் சந்திப்பில் தாமரைத்தொட்டி ஸ்டாப்பில் காம்பவுண்ட் சுவரின் கார்னர் பகுதியை உடைத்தனர். அதேபோல அம்பேத்கர் சிலை அருகிலும் மாநகராட்சி வார்டு அலுவலகம், பூங்கா உள்ள பகுதியிலும் காம்பவுண்ட் சுவரை உடைத்தனர். இப்பணிகள் நடந்து ஒரு மாதமாகும் நிலையில் பணிகள் அப்படியே முடங்கிவிட்டன. இடிபாடுகள் அப்படியே கிடக்கின்றன.
நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''அப்பகுதியில் மின்கம்பங்களை சமீபத்தில் அகற்றி சரிசெய்யப்பட்டுள்ளது. விரைவில் இடிபாடுகளை அகற்றி ரோட்டை சீரமைப்போம்'' என்றனர்.