ADDED : ஆக 28, 2026 05:52 PM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒன்றியத்தில் 25 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக இருந்தவரை பணியில் இருந்து நீக்கியதால் விஷம் குடித்தவர், சிகிச்சையில் பலியானார். அவருக்கு சரியான நீதி வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் பிணத்தை ரோட்டில் வைத்து 2 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் சுந்தராஜன் 45. இவர் 25 ஆண்டுகளாக உசிலம்பட்டி ஒன்றியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் அந்த பணியை வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளனர். இதில் மனமுடைந்த சுந்தராஜன், இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
ஆக. 17 ல்,மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தவர் அங்கேயே விஷம் குடித்தார். அங்கிருந்த போலீசார், உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உறவினர்கள் பிரேதத்துடன் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் நேற்று காலை 9.10 மணியளவில் அல்லி குண்டம் விலக்கு அருகில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் போக்குவரத்தை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். தாசில்தார் கார்த்திகேயன், ஒன்றிய கூடுதல் கமிஷனர் அன்பரசு, சேடபட்டி போலீசார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘கோரிக்கை மனு கொடுங்கள் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்போம்’ எனத் தெரிவித்ததால், பிணத்தை எடுத்துச் சென்று தகனம் செய்தனர். இந்த மறியலால் காலை 9:10 மணி முதல் 11:10 மணிவரை பேரையூர் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.
