ADDED : ஜூலை 11, 2025 03:52 AM
மதுரை: தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
முக்கியமாக சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடுகின்றனர். இதுதொடர்பான வழக்கில் பணிநீக்க காலத்தை ஊதியம், ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்தாண்டு அக்டோபரில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்தனர். கடந்தாண்டு டிசம்பரில் முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து மனு கொடுத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர். அதன்பின்னும் உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் நெடுஞ்சாலைத் துறை தாமதம் செய்து வருகிறது.
இந்நிலையில் மாநில தலைவர் வைரவன், பொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி உட்பட நிர்வாகிகள் துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து மனு கொடுத்தனர்.