ADDED : மே 04, 2025 05:00 AM
மதுரை : மதுரையில் மத்திய, மாநில தொல்லியல் துறையின் கீழ் பராமரிக்கப்படும் மலைக்குன்றுகளில் உள்ள பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் என மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதன் உறுப்பினர் தமிழ்தாசன் கூறியதாவது: பாறை ஓவியங்கள் சமுதாயத்தின் வரலாற்று பொக்கிஷங்கள். மதுரையில் உள்ள ஒன்பது மலைக்குன்றுகளில் மத்திய, மாநில தொல்லியல்துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்று சின்னங்கள் என்கிற அறிவிப்பு, தகவல் பலகை உள்ளது. அந்த இடத்தில் காணப்படும் தமிழி, வட்டெழுத்து கல்வெட்டு, சமணர் பள்ளி, சிற்பம், குடைவரை கோயில்கள் உள்ளிட்ட வரலாற்று குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் பாறை ஓவியங்கள் குறித்த தகவலோ, குறிப்புகளோ வைக்கப்படவில்லை. இதனால் வரலாற்று நினைவு சின்னமான பாறை ஓவியங்கள் மீது கிறுக்குவது, எழுதுவது, வரைவது என மக்கள் அந்த பொக்கிஷங்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படும் 16 மலைக்குன்றுகளில் 9 குன்றுகள் தொல்லியல்துறையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. மத்திய தொல்லியல்துறையின் கீழ் உள்ள அழகர்மலை சமணர் குகைத்தளத்தில் உள்ள பாறை ஓவியங்கள் முற்றிலும் சிதையும் நிலையில் உள்ளன. வருவாய்த்துறையின் கீழ் உள்ள மூன்றுமலை, புத்துார்மலை, தேவக்குறிச்சி மலை, கிழவிகுளம் மலை, புலிமலை, கவுரிமலைக்குன்றுகளில் உள்ள பாறை ஓவியங்கள் பாதுகாப்பின்றி சிதையும் நிலையில் உள்ளது. ஒரு மலைக்குன்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கிறது. எனவே பாறை ஓவியங்கள் குறித்த அறிவிப்பு பலகையை மத்திய, மாநில அரசுகள் வைத்து அவற்றை பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து அரசுக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.
மத்திய தொல்லியல்துறையின் கீழ் உள்ள அழகர்மலை சமணர் குகைத்தளத்தில் உள்ள பாறை ஓவியங்கள் முற்றிலும் சிதையும் நிலையில் உள்ளன.

