/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 02, 2025 03:33 AM
மதுரை : பெரம்பலுார் மாவட்ட கலெக்டரை கண்டித்து மதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலுார் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் காந்திமதிநாதன், பிரபு, சரவணன், அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், திட்ட அலுவலர் தேவநாதனை சந்தித்து மனு கொடுக்க சென்றனர்.
அவர்களிடம் ஆவேசம் காட்டிய கலெக்டர், கோரிக்கை மனுவை கசக்கி எறிந்துள்ளார். அத்துடன் அவர்களை கைது செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டதால், போலீசார் கைது செய்தனர். எனவே பெரம்பலுார் கலெக்டர், திட்ட அலுவலரை கண்டித்தும், அவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரை ஊரக வளர்ச்சி அலுவலர்கள் நேற்று மாலை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்தனர்.
மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பாலாஜி, மாவட்ட செயலாளர் அன்பழகன், பொருளாளர் அமுதரசன் உள்பட பலர் பங்கேற்றனர். 'இதேநிலை தொடர்ந்தால் ஏப். 8, மாலையில் மாநில அளவில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கறுப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்' எனத் தெரிவித்தனர்.
திருநகர்: திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல், மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் பேசினர். பொருளாளர் பிரபு நன்றி கூறினார்.