/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
11 ஆயிரம் பாம்புகளை பிடித்த சகாதேவன்: விரலை இழந்தாலும் ஆர்வம் குறையவில்லை
/
11 ஆயிரம் பாம்புகளை பிடித்த சகாதேவன்: விரலை இழந்தாலும் ஆர்வம் குறையவில்லை
11 ஆயிரம் பாம்புகளை பிடித்த சகாதேவன்: விரலை இழந்தாலும் ஆர்வம் குறையவில்லை
11 ஆயிரம் பாம்புகளை பிடித்த சகாதேவன்: விரலை இழந்தாலும் ஆர்வம் குறையவில்லை
ADDED : ஜன 15, 2024 11:40 PM

திருநகர் : பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பர். ஆனால் மதுரையில் பாம்புகளை பயமின்றி பிடிக்கும் மெக்கானிக் சகாதேவனை 39, பொதுமக்கள் 'பாம்புகளின் சகோதரன்' என்றே செல்லமாக அழைக்கின்றனர்.
சகாதேவன் கூறியதாவது: வேடர் புளியங்குளம் எனது ஊர். பாம்பு கடிக்கு மருந்து கொடுக்கும் எனது தாத்தா அழகர்சாமி, பாம்புகளின் குணாதிசயங்களை குறித்து கூறுவதை கேட்டு ஆர்வம் ஏற்பட்டது. முதன்முதலாக 10வது வயதில் தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் வந்த சாரைப்பாம்பை பிடித்து காட்டில் விட்டேன். அதன்பின் பாம்பு பிடிக்க பலரும் அழைத்தனர். இது வனத்துறையினருக்கு தெரிந்து 15 ஆண்டுகளாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளேன்.
விரலை இழந்த சகாதேவன்
இதுவரை 120 பாம்புகள் என்னைக் கடித்துள்ளன. திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் கண்ணாடி விரியனை பிடித்தபோது கடித்து விட்டது.
மதுரை அரசு மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சைக்குப் பின் திரும்பினேன்.
மற்றொரு முறை ஆறடி நீள நாகப்பாம்பு, எனது இடதுகை விரலில் கடித்ததால், சிகிச்சை பெற்றும் விரலை இழந்தேன்.
உணவு சங்கிலியில் பாம்புகள்
பாம்பு இனங்கள் உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. விவசாய நிலங்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் எலி, தவளைகளை பாம்புகள் தின்று கட்டுப்படுத்துவதால் விவசாயம் பாதுகாக்கப்படுகிறது.
காட்டுப்பகுதிகள், புதர்கள், கற்கள், கண்மாய் பகுதிகளில் பாம்புகள் தங்கும்.
தன்னை தொந்தரவு செய்யாதவரை அவை யாரையும் கடிப்பதில்லை. அவற்றை அடித்தால், மிதித்தால் தன்னை பாதுகாக்க கடிக்கின்றன. வீடுகளைச் சுற்றி உணவுக் கழிவுகள் இருந்தால் எலி, தவளைகள், பூச்சிகள்வரும்.
அதற்கக பாம்புகளும் வருகின்றன. எனவே மரப் பொருள்கள், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை கண்டபடி குவித்து வைக்கக் கூடாது.
விழிப் புணர்வு அவசியம்
பாம்புகள் கடித்தால் மெதுவாக நகர்ந்து செல்ல வேண்டும். ஓடுவது, கடித்த இடத்தை அசைக்கக் கூடாது. கடித்த இடத்தில் நல்ல தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வாயால் உறிஞ்சி ரத்தத்தை எடுக்கக் கூடாது.
பாம்புகள் குறித்து கல்லுாரிகள், 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். பாம்புகள் மட்டுமின்றி காயமுற்ற, நோயால் பாதித்த மயில்கள், குரங்குகள், மரநாய், மான், முள்ளம்பன்றியையும் வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளேன் என்றார். இவரை 98650 24456ல் பாராட்டலாம்.