/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இறைவனே குருவாக வருவார் என்பது சனாதனத்தின் கொள்கை ஆன்மிக பேச்சாளர் சீனிவாசன் தகவல்
/
இறைவனே குருவாக வருவார் என்பது சனாதனத்தின் கொள்கை ஆன்மிக பேச்சாளர் சீனிவாசன் தகவல்
இறைவனே குருவாக வருவார் என்பது சனாதனத்தின் கொள்கை ஆன்மிக பேச்சாளர் சீனிவாசன் தகவல்
இறைவனே குருவாக வருவார் என்பது சனாதனத்தின் கொள்கை ஆன்மிக பேச்சாளர் சீனிவாசன் தகவல்
ADDED : டிச 27, 2024 05:16 AM

மதுரை: ''இறைவனே குருவாக வருவார் என்பது சனாதனத்தின் கொள்கை,'' என காஞ்சி மஹா பெரியவரின் ஆராதனையை முன்னிட்டு மதுரையில் அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஆன்மிக பேச்சாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் தெரிவித்தார்.
'குருவே சரணம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
நாம் வாழும் காலத்தில் சொல்லும் செயலும் ஒன்றுபட்ட சன்னியாசியாக விளங்கியவர் காஞ்சி மஹா பெரியவர். அவரது அறிவுரைகள் மூலம் தெய்வத்தின் குரலாக இன்றும் நம்மை வழி நடத்தி வருகிறார்.
சனாதன தர்மத்தில் நம்மை வழிநடத்த குரு வழிபாடு அவசியம். ஆதிகாலம் துவங்கி மன்னர்கள் காலம் வரை  ஆட்சியாளர்களை வழி நடத்த ராஜகுரு இருந்தார். இதனையே திருவள்ளுவரும் 'வழிகாட்ட தகுதி உடைய ஒருவர் இல்லாவிட்டால் மன்னனாக இருந்தாலும் கீழான நிலைக்கு தள்ளப்படுவான்' என்றார்.
வாழ்வில் உயர உயர மேலே செல்லும் போதும், உயர்ந்த பதவிகளிலே இருக்கும் போதும் நம்மை தகுதிப்படுத்த,  வழிநடத்த பெரியவர்கள் இருக்க வேண்டும்.
இறைவனே குருவாக வருவார் என்பது சனாதனத்தின் கொள்கை. அவ்வையாரும் விநாயகர் அகவலில் விநாயகர் குருவாக வர வேண்டும் என்றார். அருணகிரிநாதர் முருகனை  'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்றார்.
முருகன் சிவபெருமானுக்கு, பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்து சுவாமிநாதன் என புகழ் பெற்றார். அகத்தியருக்கு தமிழை உபதேசித்தார்.
சிவபெருமான் மாணிக்க வாசகருக்கு திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் குருந்த மரத்தடியில் குருவாக அருள்பாலித்தார்.
அதனால் நமக்கு திருவாசகம் என்னும் பொக்கிஷம் கிடைத்தது. மதுரையிலே அன்னை மீனாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும் காசியில்  விசாலாட்சியாகவும் காட்சி தந்து  குரு வடிவில் அருள் பாலிக்கிறார் என்றார்.
இன்று காலை 9:00 மணிக்கு மஹா பெரியவர் வெள்ளிப் பாதுகை, விக்கிரகத்திற்கு எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து நெல்லை வெங்கடேச பாகவதர் குழுவினரின் ஆண்டாள் திருக்கல்யாணம், நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.

