UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 06:06 PM
மதுரை: மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த துாய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள 'அவர்லேண்ட்' நிறுவனத்தை வெளியேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கும் துாய்மைப் பணியாளர் சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நாளை (அக். 5) முதல் மாநகராட்சி முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுசம்பந்தமான கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மைப் பணியாளர்கள் 4800 மனுக்களை மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமாரிடம் வழங்கி, அக். 5 முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். அவர்களிடம் நேற்று மாநகராட்சி கமிஷனர், சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், வி.சி.க.,வின் துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ., ஆகிய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது 'அவர்லேண்ட்' நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும். அதற்காக தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தினக்கூலி, தொகுப்பூதியம், ஒப்பந்த முறையில் 2 ஆண்டுகள் பணி செய்தவர்களை படிப்படியாக நிரந்தரப்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பாதாள சாக்கடை சீரமைப்புத் திட்டத்தில் தனியார் பங்களிப்பை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நவ. 15ல் ஒப்பந்த முடிவுக்கு பின் 'அவர்லேண்ட்' நிறுவனம் தானாகவே வெளியேறிவிடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதுடன், அரசாணை ரத்து, பணி நிரந்தரம் குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 'சுமூக உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி நாளை முதல் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும்' என சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், அம்சராஜ், போஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
