ADDED : செப் 27, 2024 06:55 AM
தீத்தடுப்பு பயிற்சிகள்
மதுரை: மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி இளையோர் செஞ்சிலுவை மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை, தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி நடந்தது. முதல்வர் அசோக்குமார் துவக்கி வைத்தார். பேராசிரியர் வேல்கண்ணன் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க செயல்பாடுகள், பருவநிலை மாற்றம், பேரிடர் காலங்களில் மாணவர்களின் பங்களிப்பு, உயிர்காக்கும் முதலுதவி பற்றிய செயல்முறை விளக்கங்களை சங்க செயலாளர் ராஜ்குமார் விளக்கினார். தீயணைப்பு அலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையிலான குழுவினர் செய்முறை விளக்கங்களை அளித்தனர். சங்க உறுப்பினர்கள் அறிவழகன், சிலம்பரசன் பங்கேற்றனர்.
தாத்தா பாட்டியர் தினம்
நாகமலை: எஸ்.பி.ஓ.ஏ., சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாத்தா பாட்டியர் தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் கணபதி துவக்கி வைத்தார். மழலையர் மாணவி அஷ்விகா வரவேற்றார். முதல்வர் லதா திரவியம், தாத்தா பாட்டியர் தினம் கொண்டாடுவதன் நோக்கம் குறித்து பேசினார். மேலக்குயில்குடி ஊராட்சிதலைவர் ஜெயபிரபு பங்கேற்றார். மழலையர் பிரிவு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வயதானோருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மழலையர் ஹர்ஷிகா, விதுன் பாண்டியன் நன்றி கூறினர். குழந்தைகள் பிரிவு பொறுப்பாளர் ஹெப்சிபா, தலைமை ஆசிரியர் அனிதா கரோலின், உதவித் தலைமை ஆசிரியர் பொற்கொடி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இன்வெர்ட்டர் வழங்கல்
கொட்டாம்பட்டி: சொக்கலிங்கபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் இன்வெர்ட்டர் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் உக்கிரபாண்டியன் தலைமை வகித்தார். மாணவரின் தந்தை அஷ்ரப்அலி பள்ளிக்கு இன்வெர்ட்டர் வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளஞ்செழியன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு கருத்தரங்கு
மதுரை: பாத்திமா கல்லுாரியில் ஐ.கியூ.ஏ.சி., யுவா டூரிசம் கிளப் சார்பில் சுற்றுலாவில் தொழில்வழிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் ரோஸ் மேரி தலைமையில் நடந்தது. மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், சுற்றுலா திட்டங்கள், தமிழகத்தில் உள்ள சுற்றுலா இடங்கள், அத்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கினார். உதவி சுற்றுலா அலுவலர்கள் சுபாஸ்ரீ, அன்பரசன் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு சுற்றுலா தலங்கள், சுற்றுலாத்துறையின் பாஸ்போர்ட் புத்தகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகள் கிரித்திகா வரவேற்றார், ஹரிணி நன்றி கூறினார்.
கல்லுாரிகளுக்கு இடையே போட்டி
மதுரை: லேடி டோக் கல்லுாரியில் ஆங்கிலத் துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையே பயண இலக்கியம் (ஆர்கேடியா) என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடந்தன. முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். துறை தலைவர் ஜெஸ்ஸி ரஞ்சிதா துவக்கி வைத்தார். எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் பேசினார். மாணவிகளுக்கான போட்டிகளில் பாத்திமா கல்லுாரி முதல் பரிசு வென்றது. தியாகராஜர் கல்லுாரி 2ம் பரிசு வென்றது. பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இலவச சைக்கிள் வழங்கல்
மதுரை: செயின்ட் ஜோசப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவசை சைக்கிள்களை எம்.எல்.ஏ., பூமிநாதன் வழங்கினார். கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, மாயழகு ஆசிரியர்கள், ம.தி.மு.க., நகர் செயலாளர் முனியசாமி, நிர்வாகிகள் முனியசாமி, கோவிந்தன், தி.மு.க., நிர்வாகிகள் முத்து, சடையாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.