ADDED : நவ 21, 2024 04:48 AM
மதுரை: துாத்துக்குடி மாவட்டம் தளவாய்புரத்தில் உள்ள தனியார் கிடங்கில் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் மானிய விலை பாரத் யூரியா மூடைகளை பதுக்கி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துவதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள 'தமிழ்நாடு பெர்ட்டிலைசர்' உரக்கடையில் வாடிப்பட்டி வட்டார உர ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டார்.
அதில் மானிய விலையில் விற்கப்படும் பாரத் யூரியா மூட்டைகள், பி.ஓ.எஸ்., மிஷின் இருப்பு, புத்தக இருப்பு, கிடங்கில் உள்ள பொருட்கள் இருப்பில் வித்தியாசம் இருந்தது. உரக்கடை உரிமையாளர் ஸ்டாலின் ஆய்வுக்கு ஒத்துழைக்கவில்லை.
இதனால் வேளாண் உதவி இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. உரிமையாளர் கடையை பூட்டி சென்றுவிட்டதால் உரங்களின் இருப்பு குறித்து அக்குழுவால் ஆய்வு செய்ய இயலவில்லை.
உரிமையாளரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பதிலளிக்காததால் வி.ஏ.ஓ., முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

