/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டி கண்மாய் மூத்த விஞ்ஞானி ஆய்வு
/
உசிலம்பட்டி கண்மாய் மூத்த விஞ்ஞானி ஆய்வு
ADDED : ஜூன் 04, 2025 01:25 AM
உசிலம்பட்டி: கழிவுநீர், குப்பை தேங்குமிடமாக மாறிவரும் உசிலம்பட்டி கண்மாயை சீரமைக்க மேற்கொள்ள மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, நகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.
உசிலம்பட்டி நகராட்சியின் நிலத்தடி நீராதாரமாக விளங்கும் இக்கண்மாய் 33 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அசுவமாநதி மற்றும் சீமானுாத்து மலைப்பகுதிகளில் இருந்து வரும் ஓடை நீர் மற்றும் 58 கிராம கால்வாய் நீர் கண்மாயின் நீராதாரமாக உள்ளது. இந்த கண்மாய் நிரம்பி மறுகால் செல்லும் நீர் பூதிப்புரம், ஆனையூர் சின்ன, பெரிய கண்மாய்கள் வழியாக வாலாந்துார் கண்மாய் செல்லும்.
நகரின் விரிவாக்கத்தின் காரணமாக நகரின் மேற்குப்பகுதியில் உள்ள 6க்கும் மேற்பட்ட வார்டுகளின் கழிவுநீர் கண்மாய்க்குள் கலக்கிறது. கரைகள் முழுவதும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. நகரில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் மக்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்கும் இடமாகவும் கரைப்பகுதி உள்ளது.
கழிவுநீர், குப்பையை அகற்றி கண்மாயை துாய்மைப்படுத்தி, கரைகளில் மக்கள் நடைபயிற்சி பகுதியாக மாற்றும் பணிகள் செய்து தர வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சீரமைப்பு பணிக்காக முன்னாள் அணு ஆராய்ச்சி மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையிலான குழுவினர், நகராட்சி துணைத்தலைவர் தேன்மொழி, கமிஷனர் இளவரசன், பொறியாளர் சசிகுமார், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் நேற்று கண்மாய் பகுதியை பார்வையிட்டனர்.