/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பண்ணை சாரா கடன்களுக்கு தீர்வு திட்டம்
/
பண்ணை சாரா கடன்களுக்கு தீர்வு திட்டம்
ADDED : பிப் 28, 2024 04:58 AM
மதுரை, : மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பண்ணை சாரா கடன்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
கூட்டுறவு சங்கங்களில் வசூலாகாமல் நிலுவையிலுள்ள பண்ணை சாராக்கடன்கள், நீண்ட கால நிலுவைகளுக்கு சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சிறு வணிக கடன், போக்குவரத்து, கைத்தறி, தொழில், வாணிபக் கடன்கள், பத்திர ஈட்டு, வீடு கட்டும், வீட்டு அடமானம், சுயஉதவிக் குழுக் கடன்கள், தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் விளைபொருட்களை கொள்முதல், விற்பனை செய்த வகையில் பெற்ற கடன்களை 2022 டிச.31க்குள் செலுத்த காலக்கெடு முடிந்தது.
தவணை தவறிய கடன்கள் பெற்றவர்கள் அசல் வட்டியுடன் கூடிய நிலுவைத் தொகையில் 25 சதவீதத்தை 2023 டிச.13 முதல் மூன்று மாதத்திற்குள் செலுத்தி வங்கி, சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். மீதி 75 சதவீதத் தொகையை 6 மாத காலத்திற்குள் 6 தவணைகளுக்குள் செலுத்த வேண்டும். அசலுக்கு 9 சதவீத சாதாரண வட்டி வசூலிக்கப்படும். கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
இத்திட்டம் 2024 செப்டம்பர் வரை அமலில் இருக்கும். மத்தியக் கூட்டுறவு வங்கி, வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடன் பெற்றோர் பயனடையலாம் என்றார்.
கூடுதல் விவரங்களுக்கு சரக துணைப்பதிவாளர் மதுரை 0452 - 2350999, சரக துணைப்பதிவாளர், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலத்திற்கு 04549 - 280871 ல் தொடர்பு கொள்ளலாம்.

