/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு
/
தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு
ADDED : ஜன 16, 2025 05:26 AM

சென்னை: புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 41. இவர், வெடிகுண்டு வீசுவதில் கெட்டிக்காரர். இதனால், போலீசார் மற்றும் ரவுடிகள் இவரை 'பாம்' சரவணன் என, அழைக்கின்றனர்.
இவர் மீது ஆறு கொலைகள், கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் என, 26க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்தாண்டு ஜூன் 5ல் சென்னை பெரம்பூரில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக பாம் சரவணன் செயல்பட்டு வந்தார். இவரது அண்ணன் தென்னரசு. பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலராக இருந்தார்.
இவரை 2015ல் சென்னை தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு பகுதியில் ரவுடி ஆற்காடு சுரேஷ் தீர்த்துக் கட்டினார். இதனால் பாம் சரவணனுக்கு பரம எதிரியாக மாறினார்.
அதேபோல தற்போது வேலுார் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுக்கும் பாம் சரவணனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.
2018ல் சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் ரயில்வே கேட் பகுதியில் நாகேந்திரன் கூட்டாளிகளை தீர்த்துக்கட்ட பதுங்கி இருந்தபோது பாம் சரவணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜாமினில் வெளி வந்த பின், தலைமறைவாக இருந்து வந்தார். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி வாங்காமல் விடமாட்டேன் என, சபதம் எடுத்து சுற்றி வந்தார். அவரது கொலை பட்டியலில், ரவுடிகள் சம்பவம் செந்தில், நாகேந்திரனின் கூட்டாளிகள் உள்ளனர்.
ஆந்திராவில் பதுங்கி இருந்த பாம் சரவணனை, சென்னை மாநகர ரவுடிகள் ஒழிப்பு போலீசார் துப்பாக்கி முனையில் நேற்று கைது செய்தனர்.
பாம் சரவணனை நேற்று வழக்கு விசாரணைக்காக சென்னை எம்.கே.பி.நகர் அழைத்து வந்த போது, தப்ப முயன்றார். உஷாரான போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். காலில் குண்டு காயமடைந்த சரவணன், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.