/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எப்ப சார் நெல்லை கொள்முதல் செய்வீங்க...
/
எப்ப சார் நெல்லை கொள்முதல் செய்வீங்க...
ADDED : மார் 03, 2024 05:59 AM

மேலுார்: கொட்டகுடியில் நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் விவசாயிகள் நெல்லை தனியாரிடம் நஷ்டத்திற்கு விற்கும் அவலம் நிலவுகிறது.
கொட்டகுடி, அரசப்பன்பட்டி, பனங்காடி உள்ளிட்ட கிராமங்களில் கிணற்று நீரை கொண்டு நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது.
அறுவடை நெல்லை கொட்ட குடியில் ஆண்டுதோறும் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்படும். அதனால் 20 நாட்களுக்கு முன் கொள்முதல் நிலையம் துவங்ககோரி ஊராட்சி தலைவி பூமாதேவி கலெக்டர், வேளாண்மை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை துவங்கவில்லை.
விவசாயிகள் கூறியதாவது: 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடைகள் கொள்முதல் செய்யாததால் 15 நாட்கள் வெயிலில் காய்ந்து வீணாகின்றன. கொள்முதல் நிலையம் செயல்படும் இடத்தில் நெல்லை கொட்ட இடமில்லாததால் அறுவடை செய்யாமல் வயலில் நெல் வீணாகி வருகிறது.
நெல் கொள்முதல் நிலையத்தில் 65 கிலோ கொண்ட மூடை ரூ.1500 க்கு விற்க வேண்டிய நெல்லை தனியார் ரூ.1200க்கு வாங்குகின்றனர். அதனால் மூடைக்கு ரூ.300 நஷ்டம் ஏற்படுகிறது. எங்களுக்கு மனஉளைச்சல் அதிகரித்துள்ளது என்றனர்.

