/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் சஷ்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: நாளை மறுநாள் காப்பு கட்டுதலுடன் துவக்கம்
/
குன்றத்தில் சஷ்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: நாளை மறுநாள் காப்பு கட்டுதலுடன் துவக்கம்
குன்றத்தில் சஷ்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: நாளை மறுநாள் காப்பு கட்டுதலுடன் துவக்கம்
குன்றத்தில் சஷ்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: நாளை மறுநாள் காப்பு கட்டுதலுடன் துவக்கம்
ADDED : அக் 19, 2025 10:23 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாட்களில் கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
நாளை மறுநாள் (அக். 22) காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்குகிறது. விழா நடக்கும் ஆறுநாட்களிலும் மதுரை உட்பட வெளியூர்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். அவர்கள் தினமும் காலை, மாலை சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் சென்று கோயிலில் தங்குவர். கோயிலில் பக்தர்களின் வசதிக்காக வளாகம், சரவணப் பொய்கை கிரிவலப் பாதையில் கழிப்பறைகளை பராமரிக்க பணியாளர்களை நியமிக்க உள்ளனர்.
கோயிலில் அனைத்து மண்டபங்களிலும் மெகா டி.வி., க்கள் அமைத்து யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்ற நேரங்களில் சுவாமி திரைப்படங்கள், கோயிலில் நடந்த திருவிழா நிகழ்வுகள் ஒளிபரப்பாகும்.
கூடுதல் மின்விசிறிகுடிநீர் வசதி, விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு மதியம் தேன், தினை மாவு, சர்க்கரை கலந்த பிரசாதம், மாலையில் சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, இரவில் பாலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. தினமும் சுவாமி புறப்பாடு தவிர்த்த நேரங்களில், பக்தர்களுக்காக பக்தி கலை நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் துவங்கியுள்ளது.
ரத வீதிகள், கிரிவல ரோடுகளில் பள்ளங்களை சீரமைக்கவும், சரவணப் பொய்கை வாகன காப்பகம், அவனியாபுரம் சந்திப்பு, காசி விஸ்வநாதர் கோயில் செல்லும் புதிய படிக்கட்டு, சுற்றுச்சூழல் பூங்கா, பழநி ஆண்டவர் கோயில் தெரு உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி, ஐந்து இடங்களில் நடமாடும் கழிப்பறை வாகனங்கள் நிறுத்துவது, குப்பை உடனுக்குடன் அகற்றவும் மாநகராட்சி கமிஷனரிடம் கேட்டுக்கொள்வது என அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் கோயில் முன்பும், சரவணப் பொய்கையிலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளது. சரவணப் பொய்கையில் கமாண்டோ குழு அமைக்கப்பட உள்ளது.