ADDED : அக் 28, 2025 03:59 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் 1 முதல் 12 வது வார்டு வரையிலான பகுதிகளில் சிறப்பு கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவர் சகுந்தலா, கமிஷனர் இளவரசன், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். சாக்கடை வடிகால் வசதி, வார்டு பகுதி ஆக்கிரமிப்புகளை எடுப்பது, குடிநீர் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.
சோழவந்தான் பேரூராட்சியில் 1,2,7,8,13,14 வார்டுகளில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஈஸ்வரி, முத்துச்செல்வி உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி பணியாளர்கள் கண்ணம்மா, செல்வமணி, கண்ணதாசன் மனுக்களை பெற்றுக் கொண்டனர். சேர்மன் ஜெயராமன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலுார் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணவேணி, தலைவர் முகமது யாசின் தெரிவித்துள்ளதாவது: நாளை (அக்.29) அந்தந்த வார்டுகளில் கவுன்சிலர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, ரோடு பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான குறைபாடுகள் குறித்து மனு செய்து பயன் பெறலாம் என தெரிவித்தனர்.

