/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி, கல்லுாரிகளில் பட்டாம்பூச்சிகளுக்கு தனி இடம் கருத்தரங்கில் வலியுறுத்தல்
/
பள்ளி, கல்லுாரிகளில் பட்டாம்பூச்சிகளுக்கு தனி இடம் கருத்தரங்கில் வலியுறுத்தல்
பள்ளி, கல்லுாரிகளில் பட்டாம்பூச்சிகளுக்கு தனி இடம் கருத்தரங்கில் வலியுறுத்தல்
பள்ளி, கல்லுாரிகளில் பட்டாம்பூச்சிகளுக்கு தனி இடம் கருத்தரங்கில் வலியுறுத்தல்
ADDED : செப் 25, 2024 03:56 AM

மதுரை : ''பட்டாம்பூச்சிகள் சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அவற்றை பாதுகாக்க பள்ளி, கல்லுாரிகளில் தனி இடம் ஒதுக்க வேண்டும்'' என ஓய்வுபெற்ற பூச்சியியல் பேராசிரியர் சுவாமியப்பன் பேசினார்.
மதுரை அமெரிக்கன் கல்லுாரி விலங்கியல், வணிகவியல் துறை சார்பில் பட்டாம்பூச்சிகளால் ஏற்படும் பசுமை பொருளாதார மேம்பாடு குறித்த கருத்தரங்கு நடந்தது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். விலங்கியல் துறைத் தலைவர் ஜாய் ஷர்மிளா வரவேற்றார்.
வேளாண் பல்கலை முன்னாள் பூச்சியியல் துறை பேராசிரியர் சுவாமியப்பன் பேசியதாவது: ஒவ்வொரு ஊரிலும் சுற்றுச்சூழல் தோட்டமும் அதில் பட்டாம்பூச்சி தோட்டமும் அமைப்பது அவசியம். மேற்கு தொடர்ச்சி மலை முதல் கிழக்கு தொடர்ச்சி மலைக்கு நடுவில் அழகர்கோவில் உள்ளதால் பட்டாம்பூச்சிகளின் 'ஹாட்ஸ்பாட்' ஆக உள்ளது. 'கார்டன் சிட்டி'என அழைக்கப்படும் பெங்களூரு நெடுஞ்சாலையில் மரங்களை வெட்டாமல் ரோட்டை அமைத்திருப்பார்கள். இப்படி இயற்கையை தொந்தரவு செய்யாமல் இருப்பது நம் கடமை. அங்கு காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை, மதியம் 3:00 மணி முதல் 5:00 மணி வரை பட்டாம்பூச்சிகளை காணலாம். மகாராஷ்டிராவில் ஒரு பள்ளியில் பட்டாம்பூச்சிகளுக்கென தனி இடம் ஒதுக்கியுள்ளனர். அப்படி ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலும் இடம் ஒதுக்க வேண்டும். பட்டாம்பூச்சிகள் பூக்களின் தேனை தவிர அழுகும் தாவரங்களின் சாறு, விலங்குகளின் சாணம், அகழி நீர், சிறுநீர், வியர்வை, அசுத்தமான நீர் போன்றவற்றையும் உட்கொள்ளும் என்றார்.
துறைத் தலைவர்கள் முத்துராஜா, கண்ணபிரான், வெள்ளத்துரை, பேராசிரியர்கள் தனஞ்ஜெயன், ஷீலா கலந்து கொண்டனர்.