ADDED : மே 28, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் கோயில் சார்பில் கட்டப்பட்டு வரும் நினைவு மண்டபத்தில் ஆறே கால் அடி உயரத்தில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட யானை சிலை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 33 ஆண்டுகளாக இருந்த யானை அவ்வை 2012ல் இறந்தது. அந்த யானையின் உடல் மலையின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த யானை அவ்வைக்கு கோயில் சார்பில் ரூ. 49.50 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
அந்த மண்டபத்தில் அமைக்க யானை அவ்வையின் கருங்கல் சிலை திருப்பூரில் செய்யப்பட்டது. ஒரே கல்லில் ஆறேகால் அடி உயரம், 8 அடி நீளம் கொண்ட சிலை நேற்று திருப்பரங்குன்றம் கொண்டு வரப்பட்டு நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டது.
மண்டப பணிகள் நிறைவடைந்து விரைவில் திறப்பு விழா நடக்க உள்ளது.