மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு ஆய்வு: தொழிற்சாலைகளுக்கான நிலம் பறிபோகிறதா
மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு ஆய்வு: தொழிற்சாலைகளுக்கான நிலம் பறிபோகிறதா
UPDATED : அக் 28, 2026 07:12 PM
ADDED : அக் 28, 2026 07:08 PM
மதுரை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெளியிடப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கான நில வகைப்பாட்டு பட்டியல் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் தொழிற்துறையினர்.
அவர்கள் கூறியதாவது:
தமிழக அரசின் நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குநரகம் (டி.டி.சி.பி.,), சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) ஆகியவை 20 முதல் 30 ஆண்டுகளுக்கான எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாஸ்டர் பிளான் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. இதுவரை டி.டி.சி.பி., சார்பில் 123 மாஸ்டர் பிளான்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2026ல் தமிழக அரசு உத்தரவின்படி புதிய மற்றும் மறுஆய்வு மாஸ்டர் பிளான்களும் ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவி தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதால் 135 நகரங்களுக்கு ஜி.ஐ.எஸ்., முறையில் புதிய, மறுஆய்வு மாஸ்டர் பிளான்கள் தயாரிக்கும் பணி நடக்கிறது.
பல மாவட்டங்களில் வெளியிடப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தில், உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்காமல் விவசாயம், வீட்டுமனை என பல்வேறு பிரிவுகளின் கீழ் மாற்றியுள்ளனர். இதுகுறித்து டி.டி.சி.பி., -சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு தெரிவித்து அதற்கான மறு வகைப்பாடு பட்டியலை கேட்டுள்ளோம். ஜி.ஐ.எஸ்., மறுஆய்விலும் இதேநிலை தொடர்வதால் நில உரிமையாளர்களின் கருத்தை கேட்க வேண்டும் என்றனர்.
