/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.20,000 லஞ்சம் வாங்கிய சார்--பதிவாளர் கைது
/
ரூ.20,000 லஞ்சம் வாங்கிய சார்--பதிவாளர் கைது
ADDED : ஜன 29, 2025 01:51 AM

உசிலம்பட்டி:உசிலம்பட்டியில் சொத்து பத்திரம் பதிய 20,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பொறுப்பு சார்-பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தரின் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், தொட்டப்பநாயக்கனுார் டி.செட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் மகாராஜா, 32. இவரது தாத்தா, பாட்டி பெயரில் 4 சென்ட் இடம் தொட்டப்பநாயக்கனுாரில் உள்ளது.
தந்தை அழகப்பனுடன் பிறந்தவர்களிடம் பேசி பாகப்பிரிவினை செய்து, அதை உசிலம்பட்டி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிய அணுகினார். பொறுப்பு சார்-பதிவாளர் ஜியாவுதீன், 47, என்பவர், 40,000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டார். மகாராஜா தயங்கியதால், '20,000 ரூபாய் தந்தால் போதும்' என்றார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிவுரைப்படி, நேற்று மதியம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஜியாவுதீனிடம், 20,000 ரூபாய் கொடுத்தபோது, அதை அங்கிருந்த பத்திர எழுத்தர் ராஜேந்திரனின் உதவியாளர் எடிசன், 27, என்பவரிடம் கொடுக்குமாறு கூறினார். அங்கிருந்த பதிவேடு அறைக்கு மகாராஜாவை அழைத்துச் சென்று எடிசன், 20,000 ரூபாய் லஞ்சம் பெற்றார்.
எடிசன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து, அவரையும், ஜியாவுதீனையும் கைது செய்தனர்.

