ADDED : நவ 24, 2025 07:09 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் திடீர்நகரில் தெருக்களில் ஓடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
அப்பகுதி நாகராஜ் கூறியதாவது: வடக்கு மற்றும் காளியம்மன் கோயில் தெருக்களில் இருந்து வரும் கழிவு நீர் இங்கு வந்து சேருகிறது. இப்பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் அமைக்காததால் கழிவுநீர் செல்ல வழியின்றி பல இடங்களில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் நோய் பரவுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், வயிற்றுப்போக்கு உபாதை ஏற்படுகிறது.
மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழி இன்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறோம். கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டியுள்ளதால் கால்களில் புண்கள் உருவாகின்றன.
நடவடிக்கை எடுக்காமல் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

