/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழக மணல் குவாரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
/
தமிழக மணல் குவாரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழக மணல் குவாரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழக மணல் குவாரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
ADDED : நவ 05, 2024 05:28 AM
புதுடில்லி; தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில், 28 இடங்களில் இருந்து 4000 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக, ஒப்பந்ததாரர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இந்த வழக்கில், ஜூலை 16ல் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், 'சுரங்கங்கள், கனிமங்கள் தொடர்பானவை, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட குற்றம் அல்ல' எனக்கூறியதுடன், விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம், சொத்துக்களை பறிமுதல் செய்யும் விவகாரத்தில், விஜய் மதன்லால் வழக்கில் 2022ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் குறிப்பை தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.