ADDED : ஜூலை 27, 2025 04:12 AM

மதுரை: மதுரையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) சார்பில் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டி மாவட்டச் செயலாளர் குமரேசன் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பால்பிரின்ஸ் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அருளானந்த், மாவட்ட மகளிரணி நிர்வாகி மீனாட்சி, துணைத்தலைவர் கமலக்கண்ணன், வட்டார பொறுப்பாளர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள் கூறியதாவது: 'சம வேலைக்கு சம ஊதியம்' என்பதை புறந்தள்ளி, 2009 ஜூன் 1க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8,370, அதன்பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,200 என 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இதை கண்டித்து 2018 மே, டிசம்பரில் இவ்வியக்கம் சார்பில் நடந்த உண்ணாவிரதத்திற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். பதவி ஏற்று 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 311வது வாக்குறுதியை நிறைவேற்றகோரி செப்டம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.