/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சொல்லுங்க சார்... சொல்லுங்க...: ரேஷனில் அரிசி பருப்பு வழங்குவதா, வங்கி படிவம் நிரப்புவதா
/
சொல்லுங்க சார்... சொல்லுங்க...: ரேஷனில் அரிசி பருப்பு வழங்குவதா, வங்கி படிவம் நிரப்புவதா
சொல்லுங்க சார்... சொல்லுங்க...: ரேஷனில் அரிசி பருப்பு வழங்குவதா, வங்கி படிவம் நிரப்புவதா
சொல்லுங்க சார்... சொல்லுங்க...: ரேஷனில் அரிசி பருப்பு வழங்குவதா, வங்கி படிவம் நிரப்புவதா
ADDED : டிச 27, 2024 05:05 AM

மதுரை: ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதோடு, கூட்டுறவு வங்கிகளில் வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கான படிவத்தையும் நிரப்ப அதிகாரிகள் வலியுறுத்துவதாக கூட்டுறவுத்துறை ரேஷன் கடை பணியாளர்கள் குமுறுகின்றனர்.
கூட்டுறவுத்துறை மூலம் 90 சதவீத ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ரேஷன் கார்டுதாரர்களை கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக்க வேண்டுமென கூட்டுறவு அதிகாரிகளிடம் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது தாமதமாகிறது என கூட்டுறவுத்துறையின் டாக்பியா சங்கத்தினர் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: ரேஷன் கடைகளுக்கு ஒரே நாளில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுவதில்லை. அரிசி, சீனி, பருப்பு லோடு ஒரு நாள் வந்தால் மீதி பொருட்கள் ஒருவாரம் கழித்து வருகிறது. ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் வழங்காமல் அலைய விடுவதாக நுகர்வோர்கள் எங்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தையும் எங்களையே நிரப்பச் சொல்லி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நுகர்வோரிடம் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்கி படிவத்தில் நிரப்பி அதை சரிபார்க்க குறைந்தது 15 நிமிடங்களாகிறது. ஒரு மணிநேரத்தில் 4 பேருக்கு படிவம் நிரப்பி கொடுத்தால் பொது விநியோக வேலைகளை பார்க்க முடியவில்லை. வரிசையில் நிற்பவர்கள் பொறுமையிழந்து கத்துகின்றனர்.
வதந்தி பரப்புவதால் வேதனை
கூட்டுறவு வங்கியில் உறுப்பினரானால் தான் பொங்கல் பரிசுத்தொகை, அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்கும் என சிலர் வதந்தி பரப்புகின்றனர். எந்த வங்கியில் கணக்கு வைத்தாலும் அரசு வழங்கும் தொகை கிடைக்கும் என ஒவ்வொருவருக்கும் விளக்க வேண்டியுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரேஷன் கடைகளில் தனி கவுண்டர் அமைத்து கடைக்கு ஒரு பணியாளரை நியமித்து வங்கி உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரித்தால் இப்பிரச்னை தீரும் என்றனர்.

