UPDATED : நவ 06, 2026 07:24 PM
ADDED : நவ 06, 2026 05:11 PM
கொட்டாம்பட்டி: க.புதுார் கிராம மக்கள், மாணவர்கள் கருப்பன் ஊருணியில் செயல்படும் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி மந்தையில் ஐந்து நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்தின் போது கும்மிகொட்டி, ஒப்பாரி வைப்பதும், கண்ணில் கருப்பு துணி கட்டி போராடினர். இதையடுத்து இன்று (நவ.,6) கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா , 30 நாட்களுக்கு தற்காலிகமாக குவாரியை மூடக்கோரியும், விதிமீறல் குறித்து டி.ஆர்.ஓ., டி.எஸ்.பி., ஆர்.டி.ஓ., உதவி இயக்குனர் புவியியல் மற்றும் சுரங்க துறை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தாசில்தார், நில அளவர், வி.ஏ.ஒ., உள்ளிட்டோரைக் கொண்டு ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைத்தும், 30 நாட்களுக்கு அறிக்கை வழங்கவும் உத்தரவிட்டார். இம் முடிவை ஏற்ற கிராமத்தினர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
