/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
13 ஆண்டுகளாக காலியாக கிடக்கும் பத்தாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் தொய்வாகுதா தொடக்கக் கல்வி
/
13 ஆண்டுகளாக காலியாக கிடக்கும் பத்தாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் தொய்வாகுதா தொடக்கக் கல்வி
13 ஆண்டுகளாக காலியாக கிடக்கும் பத்தாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் தொய்வாகுதா தொடக்கக் கல்வி
13 ஆண்டுகளாக காலியாக கிடக்கும் பத்தாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் தொய்வாகுதா தொடக்கக் கல்வி
ADDED : நவ 09, 2025 05:48 AM
மதுரை: தமிழக தொடக்கக் கல்வித்துறையில் 13 ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடப்பதால் மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
மாநிலத்தில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் மாணவர் எண்ணிக்கைக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை பல ஆண்டுகளாக தொடர்கின்றன.
அரசு தொடக்கக் கல்வித்தரம் வலுவாக இருந்தால் நடு, உயர்நிலைகளில் மாணவர்கள் தரமும் நன்றாக இருக்கும். கொரோனா தாக்கத்தால் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் சில திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தினாலும், சில ஆண்டுகளாக தொடக்கக் கல்வியின் தரம் கேள்விக்குறியாகி தான் வருகிறது.
இதற்கு பிரதான காரணம் 13 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் போதியதாக இல்லை என்பதே.
ஆனால் அரசு வழங்கும் நலத்திட்டங்களால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. 2012 -2013ல் அதிக எண்ணிக்கையில் தொடக்கக் கல்வியில் ஆசிரியர் நியமிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு பின் 13 ஆண்டுகளாக நியமனம் இல்லை. இந்தாண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனாலும் தற்போது 10 ஆயிரத்திற்கும் மேல் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதியளித்தும் ஆட்சி முடியும் நிலையிலும் அதற்கான நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தொடக்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் தான் அரசு நடு, உயர்நிலை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் வாசிக்க தெரியாத, அடிப்படை கணித அறிவு இல்லாத ஏராள மாணவர்கள் உருவாகியுள்ளனர். ஒன்பதாம் வகுப்பில் கூட மொழிப் பாடங்களை வாசிக்க தெரியாத மாணவர் உள்ளனர் என்பது கசப்பான உண்மை.
இதனால் தான் தற்போது 'எண்ணும் எழுத்தும்', 'திறன்' போன்று திட்டங்களுக்கு ரூ.கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடக்க கல்வியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிவிட்டாலே இதுபோன்ற திட்டச் செலவினங்களுக்கு ரூ.பல கோடிகளையும் ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 'டெட்' தேர்ச்சி பெற்று தயார் நிலையில் உள்ளனர்.
ஆனாலும் பற்றாக்குறையை சமாளிக்க தொகுப்பூதியத்தில் தான் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். காலியிடங்களில் நிரந்தர ஆசிரியர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

