UPDATED : நவ 10, 2026 10:06 AM
ADDED : நவ 10, 2026 10:02 AM

மேலுார்: திருவாதவூர் –-- புதுப்பட்டி ரோட்டில் வெள்ளமுத்தன்பட்டி, உலகுபிச்சன்பட்டி உள்ளிட்ட 3 கிராமங்களில் 2500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை உள்ளது. இப்பகுதி மக்கள் தங்களுடைய படிப்பு, வேலை, வயல் உள்ளிட்ட பணிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் செல்கின்றனர்.
டி.மாணிக்கம்பட்டி கிராம மாணவர்களும் பள்ளிக்கு செல்கின்றனர். மக்களின் போக்குவரத்திற்காக 7ஆண்டுக்கு முன் அமைத்த தார் ரோடு பெயர்ந்து ஜல்லிக்கற்களாக மாறிவிட்டது. அவை நடந்து செல்வோர் காலில் குத்துவதால் காயமும், டூவீலரில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்தும் ஏற்படுகிறது.
ஆம்புலன்ஸ் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் ரோட்டில் பயணிக்க அச்சமடைந்து, வீட்டிற்குள் முடங்கி கிடப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் புதிய தார் ரோடு அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
