ADDED : செப் 08, 2025 06:10 AM

சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற ஏடு எதிரேறிய விழா நடந்தது.
திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்து சமணர்களுடன் சொற்போர் நிகழ்த்தினார். மன்னரின் வெப்பு நோய் நீங்க பாசுரம் பாடியும், அனல்வாதத்தில் வென்றும், புனல்வாதம் புரிந்தார்.
வைகை ஆற்றில் விடப்பட்ட 'வாழ்க அந்தணர்' எனும் திருப்பாசுர ஏடு மதுரையில் இருந்து வைகை நீரை எதிர்த்து நீந்தி வந்து திருவேடகத்தில் வந்து நின்று வாதத்தில் வென்றது ஐதீகம் ஆகும். இந்நிகழ்வை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் இங்கு விழா நடக்கிறது. இந்தாண்டும் வழக்கம் போல் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு விழா நடந்தது. வழக்கமாக மாலையில் நடைபெறும் விழா, சந்திர கிரகணத்தை முன்னிட்டு காலையில் நடந்தது. நாயன்மார்களுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்பு வாதத்தில் வென்ற விநாயகர், திருஞானசம்பந்தர் சப்பரத்திலும், குலச்சிறை நாயனார் குதிரை வாகனத்திலும் கோயிலில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு சென்றனர்.
அங்கு சிறப்பு பூஜைகள், தேவாரப் பாடல்கள் பாடப்பட்டன. சிறிய சப்பரத்தில் ஏடு வைக்கப்பட்டு வைகை ஆற்றில் விடப்பட்டு ஏடு எதிரேறிய நிகழ்ச்சி நடந்தது. செயல் அலுவலர் சரவணன் ஏற்பாடுகளை செய்தார்.