பாசனப்பகுதிகளை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்
பாசனப்பகுதிகளை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்
UPDATED : அக் 28, 2026 06:12 PM
ADDED : அக் 28, 2026 06:06 PM
மதுரை: மழையில்லாததால் பெரியாறு, வைகை, காவிரி டெல்டா பாசனப்பகுதிகளை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
மதுரை வேளாண் கல்லுாரியில் நடந்த தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு) ரவீந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சுப்ரமணியன், மாநாட்டு அமைப்பாளர் கருப்பையா உடனிருந்தனர்.
பாண்டியன் கூறியதாவது:
மழையின்றி பெரியாறு, வைகை பாசனப் பகுதிகளில் இருபோக, ஒருபோக சாகுபடி அழிந்துவிட்டது. மேட்டூர் அணையில் 54 அடிக்கு குறைவாக தண்ணீர் உள்ளது. காவிரி டெல்டாவில் முளைவிட்ட பயிர்கள் மழையில் மூழ்கியுள்ளது. பயிர்களை வளர்த்தாலும் கதிர் வரும் நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு சாகுபடி பொய்த்து போகும்.
காவிரி, வைகை, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்றவேண்டும். சென்னையில் ஜன., 22 முதல் 24 வரை நடக்க உள்ள 2வது மாநாட்டில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் அர்லேக்கர், முதல்வர் விஜய் பங்கேற்க அழைத்துள்ளோம் என்றார்.
