/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகிழம்பூ குடியிருப்பில் மகிழ்ச்சி இல்லை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை
/
மகிழம்பூ குடியிருப்பில் மகிழ்ச்சி இல்லை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை
மகிழம்பூ குடியிருப்பில் மகிழ்ச்சி இல்லை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை
மகிழம்பூ குடியிருப்பில் மகிழ்ச்சி இல்லை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை
ADDED : ஜூன் 19, 2025 02:52 AM

மதுரை: மதுரை தனக்கன்குளம் ஊராட்சி மகிழம்பூ குடியிருப்பு பகுதியில் தரமான ரோடு, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
குடியிருப்பு நலச்சங்கத்தலைவர் கடற்கரை, செயலாளர் சொக்கலிங்கம், பொருளாளர் ரதிதேவி, துணைத் தலைவர் புகழேந்தி, துணைச் செயலாளர் பேபி ராணி, ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன், நிர்வாகி ராதாகிருஷ்ணன், சட்ட ஆலோசகர் செண்பகராஜ் கூறியதாவது:
ரோடு வசதியே இல்லை
தனக்கன்குளம் ஊராட்சி விரிவாக்கப் பகுதியான இங்கு மகிழ்ச்சி நகர், ஜெயம் நகர், அபிஷேக் நகர், ரோஜா நகர், சமாதான நகர் உள்ளிட்ட பகுதிகள், 10 குறுக்குத் தெருக்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில், தென்பழஞ்சி - திருமங்கலம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் 10 ஆண்டுகளுக்கு முன் தார் ரோடு அமைக்கப்பட்டது. போதிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சமாதான நகரின் ஒரு குறுக்குத் தெருவில் மட்டும் 6 ஆண்டுகளுக்கு முன் 'பேவர் பிளாக்' ரோடு அமைக்கப்பட்டது. பல குறுக்குத் தெருக்கள் மண் ரோடாகவே உள்ளன.
இதனால் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக, நடந்து செல்ல முடியாத வகையில் மாறிவிடுகிறது. திருமங்கலம் ரோட்டில் இருந்து இப்பகுதிக்கு வரும் நுழைவு வாயிலில் ஏற்றமாக, சேதமடைந்து உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ரோடு சீரமைப்புக்காக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
குடம் குடிநீர் ரூ. 15
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு முன் கட்டிய அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருநாள் விட்டு ஒருநாள், அரை மணி நேரமே உப்பு தண்ணீர் வினியோகிக்கின்றனர். இதனால் குடிநீரை ரூ.15க்கு வாங்கும் அவலம் உள்ளது. தனக்கன்குளம் கண்மாயை துார்வாராததால் நிலத்தடி நீர் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. குடிநீர் வரியாக ஆண்டுக்கு ரூ.600 வசூலிக்கின்றனர். மேல்நிலை தொட்டி அமைத்து இப்பகுதிக்கு தினமும் குடிநீர் வழங்க வேண்டும்.
இங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக சமாதான நகர், ஜெயம் நகரில் பெரும்பாலும் 'லோ வோல்டேஜ்' காரணமாக மின்சாதனங்கள் பழுதடைகின்றன. ஜெயம் நகர் மெயின் ரோட்டிலும், கே.பி.ஆர்., தெருவிலும் மின்கம்பங்கள் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம்உள்ளது. பல பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை.
ரோட்டின் இருபுறமும் முட்புதர்கள், கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால்பாம்பு உள்பட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளன.
தெரு விளக்குகள் 20 தேவை என்ற நிலையில் 10க்கு ஒப்புதல் கிடைத்துஉள்ளதாக அதிகாரிகள் கூறினர். ஊராட்சி சார்பில்பணம் செலுத்தியும் பொருள் தட்டுப்பாடால் அமைக்கப்படாமல் உள்ளதாக இப்போது கூறுகின்றனர்.
உதவி பொறியாளருக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை. இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டில் ஈடுபடுவது, மது அருந்துவது என செயல்படுகின்றனர். பாதுகாப்பு கருதி உடனே தெரு விளக்குகளை எரியவிட வேண்டும்.
ரோட்டில் தேங்கும் கழிவுநீர்
வடிகால் வசதி இல்லாததால் ரோட்டிலும், காலி மனைகளிலும் கழிவுநீர் தேங்குகிறது. தினமும் குப்பை சேகரிக்காததால் காலி மனைகளில் கொட்டுகின்றனர். அவை மட்கி துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறந்து பாதசாரிகள் மீது விழுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று அபாயம் உள்ளது. உடனே குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும்.
வீடுகள் பெருகி வருவதால் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் வசதிக்காக ஜெயம் நகரில் பஸ் ஸ்டாப் வேண்டும். ஊராட்சி அலுவலகம் அருகே சுகாதார நிலையம்அமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு கூறினர்.