ADDED : நவ 08, 2025 01:54 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி களில் விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வால் நில உரிமையாளர்கள் நெல் பயிரிடுவதை தவிர்த்து வருகின்றனர். இப்பகுதிகளில் விவசாயிகள் நெல், வாழை, காய்கறிகள், மல்லிகை பயிரிட்டு வருகின்றனர். தற்போது குறைவான விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: முன்பு போல் வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. பலர் 100 நாள் வேலைக்கு சென்று விடுகின்றனர். அங்கு வேலை இல்லாத நாட்களில் மட்டும் விவசாய வேலைக்கு வருகின்றனர். பலர் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். இதனால் நெல் நடவு, களை எடுத்தல், அறுவடை, காய்கறிகள் பறிப்பு, பூ எடுக்க ஆட்கள் கிடைப்பதில்லை.
மேலும் கூலியும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உரங்கள், மருந்துகளின் விலையும் உயர்ந்து விட்டது. 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விவசாய வேலைக்கு வரத் தயங்குகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் நிலம் வைத்திருப்பவர்கள் குடும்பத்தினர் மட்டுமே விவசாய பணிகளில் ஈடுபடும் நிலையும், கூலி தொழிலாளிகளை நம்பியுள்ளவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்படும் என்றனர்.

