/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழந்தைத் திருமணம், பெண் கொடுமையா 1098, 181க்கு அழைக்கிறாங்க! மதுரையில் அதிகரித்து வரும் விழிப்புணர்வு
/
குழந்தைத் திருமணம், பெண் கொடுமையா 1098, 181க்கு அழைக்கிறாங்க! மதுரையில் அதிகரித்து வரும் விழிப்புணர்வு
குழந்தைத் திருமணம், பெண் கொடுமையா 1098, 181க்கு அழைக்கிறாங்க! மதுரையில் அதிகரித்து வரும் விழிப்புணர்வு
குழந்தைத் திருமணம், பெண் கொடுமையா 1098, 181க்கு அழைக்கிறாங்க! மதுரையில் அதிகரித்து வரும் விழிப்புணர்வு
UPDATED : மார் 11, 2026 09:07 AM
ADDED : மார் 11, 2026 05:02 AM

மதுரை : மதுரையில் குழந்தைத் திருமணம், பெண் கொடுமை பிரச்னைகளுக்கான 1098, 181 எண்களில் உதவி கோருவது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. குழந்தைத் திருமணம் குறித்து 1098 க்கு போன் செய்தால் உடனே மீட்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை 140 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் 87 திருமணங்கள் நிறுத்தப்பட்டு 54 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரியில் 7 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்களை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (ஒன் ஸ்டாப் சென்டர்) மதுரை பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனையிலும், உசிலம்பட்டியிலும் செயல்படுகின்றன. குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, கட்டாய திருமணம் உட்பட பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு 181 ஐ அழைக்கலாம் என்கிறார் மாவட்ட சமூகநல அலுவலர் காந்திமதி.
அவர் கூறியதாவது: பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு தங்கவைக்க மதுரையில் இரண்டு மையங்கள் உள்ளன. மீட்கும் போதே மருத்துவம், சட்டம் போலீஸ் உதவிகள் தேவைப்பட்டாலும் ஒருங்கிணைத்து சேவை செய்கிறோம்.
சேவை மையங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் வரை தங்கலாம். அதற்கு மேலும் உதவி தேவைப்பட்டால் மத்திய அரசு நிதியுதவியின் கீழ் விளாங்குடியில் செயல்படும் சக்தி சதன் இல்லத்தில் பெண்களை தங்க வைக்கிறோம். இங்கு நீண்ட நாட்கள் தங்கி விருப்பப்பட்ட தொழிற்திறன் பயிற்சி பெற்றும் சொந்தக்காலில் முன்னேறலாம்.
மேலும் முதியோர்களை மீட்டு இல்லத்தில் தங்க வைப்பதற்கு 14567 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது 181 ல் அழைக்கலாம். இவர்களுக்கு கருமாத்துார், கடச்சனேந்தலில் உள்ள இல்லங்களில் தங்குமிடம் வசதி செய்யப்படுகிறது.
குழந்தைகள், பெண்கள், முதியோர் பாதிக்கப்பட்டால் சேவை எண்ணிலோ, நேரடியாக மாவட்ட சமூக நல அலுவலகத்திலோ புகார் செய்யலாம் என்றார்.

