/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பந்தல்குடி, சிந்தாமணி கால்வாய்களால் 'கலங்கும்' மூன்று வார்டு மக்கள் பம்பிங் ஸ்டேஷனும் 'பஞ்சாயத்து'
/
பந்தல்குடி, சிந்தாமணி கால்வாய்களால் 'கலங்கும்' மூன்று வார்டு மக்கள் பம்பிங் ஸ்டேஷனும் 'பஞ்சாயத்து'
பந்தல்குடி, சிந்தாமணி கால்வாய்களால் 'கலங்கும்' மூன்று வார்டு மக்கள் பம்பிங் ஸ்டேஷனும் 'பஞ்சாயத்து'
பந்தல்குடி, சிந்தாமணி கால்வாய்களால் 'கலங்கும்' மூன்று வார்டு மக்கள் பம்பிங் ஸ்டேஷனும் 'பஞ்சாயத்து'
ADDED : நவ 21, 2024 04:52 AM

மதுரை: மதுரை நகருக்குள் செல்லும் கிருதுமால், சிந்தாமணி கால்வாய்களை துார்வார வேண்டும் என பெத்தானியாபுரம் உள்ளிட்ட மூன்று வார்டுகளை சேர்ந்த மக்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். மேலும் இடநெருக்கடியில் இயங்கும் பம்பிங் ஸ்டேஷனையும் மாநகராட்சியின் காலி இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோச்சடையில் துவங்கும் கிருதுமால் பிரதான கால்வாய், காளவாசல் பாண்டியன் நகரில் இருந்து அரசரடி நீரேற்று நிலையம் பகுதிக்கு கடப்பதில் பெரும் சவாலாக உள்ளது. நீர்வழிப்பாதை கடக்கும் இடத்தில் அதை தடுக்கும் வகையில் கல்வெட்டு சுவர் 2 அடி உயரத்தில் கட்டப்பட்டதால் முழுவதும் அடைபட்டு தேங்கியுள்ளது.
இதுபோல் கோச்சடை பகுதியில் இருந்து காமராஜர் பாலம் (குரு தியேட்டர் சிக்னல் பகுதி) வழியாக கடந்து ஆரப்பாளையம் வழியாக மேலப்பொன்னகரம் பகுதிகளுக்கு செல்லும் சிந்தாமணி கால்வாய் முழுவதும் குப்பை, கழிவுகளால் நிரம்பி அடைத்து கிடக்கிறது.
இதனால் மழைக் காலங்களில் வார்டு 64 (பெத்தானியாபுரம்), 65 (பி.பி.சாவடி) 63 (திண்டுக்கல் ரோடு பாத்திமாநகர்) ஆகிய வார்டுகளுக்குள் பாதாளச் சாக்கடை அடைப்பு, கழிவு நீர் தேங்கி பொங்கும் பிரச்னை அதிகரிக்கின்றன.
மக்கள் வசிக்கும் பகுதியில் நெருக்கடியான இடத்தில் இயங்கும் இவ்வார்டுகளுக்கான பம்பிங் ஸ்டேஷனும் சரிவர செயல்படாததால் மூன்று வார்டுகளிலும் அதிக அளவில் சுகாதாரக் கேடு ஏற்படும் பிரச்னை பெரும் சவாலாக உள்ளது.
பல ஆண்டுகளாக தொடரும் துயரத்திற்கு மாநகராட்சி முடிவு கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
64 வது வார்டு கவுன்சிலர் சோலைராஜா (அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்) கூறியதாவது:
இரண்டு கால்வாய்களும் இந்த மூன்று வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் தான் அதிகம் அடைபட்டு கிடக்கின்றன. பந்தல்குடி உட்பட 13 கால்வாய்களையும் துார்வார கவுன்சில் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
காளவாசல் சிக்னல் அருகே நெடுஞ்சாலை துறை கல்வெட்டு வைக்க நீர்வழிப்பாதையில் 2 அடி வரை அடிப்பகுதியை உயர்த்தியதால் அக்கால்வாய் அடைபட்டு கிடக்கிறது. சிந்தாமணி கால்வாயில் பல அடி உயரம் குப்பை தேங்கி கிடக்கிறது. இரண்டு கால்வாய்களையும் துார்வார வேண்டும்.
மாநகராட்சிக்கு சொந்தமாக காளவாசல் சிக்னல் அருகே 50 சென்ட் காலி இடம் உள்ளது. ரூ.பல கோடி மதிப்புள்ள இந்த இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமிக்க முயற்சி நடக்கிறது.
இந்த இடத்திற்கு இவ்வார்டுகளுக்கான பம்பிங் ஸ்டேஷனை நவீன தரத்துடன் மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கழிவுநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்றார்.

