/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீயணைப்பு துறையில் 636 பேருக்கு பயிற்சி நிறைவு
/
தீயணைப்பு துறையில் 636 பேருக்கு பயிற்சி நிறைவு
ADDED : ஜூலை 02, 2025 01:36 AM

மதுரை : தீயணைப்பு மீட்புபணிகள் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 636 பணியாளர்களுக்கான பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2023 ல் தேர்வு செய்யப்பட்ட 636 பேருக்கு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை ஒதுக்கப்பட்டது. அவர்களுக்கான அடிப்படை பயிற்சி சென்னை, தாம்பரம், மதுரை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் தற்காலிக மையம் தொடங்கப்பட்டு ஏப்.2 முதல் ஜூலை 1 வரை 99 நாட்கள் நடந்தது.
மதுரையில் கிடாரிபட்டி லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பயிற்சி மையத்தில் தீயணைப்போர்களுக்கான அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
தீ, விபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுவது, தீயணைக்கும் முறைகள், உயிர் மீட்புபணிகள், நீச்சல், ஸ்கூபா டைவிங், முதலுதவி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. போலீஸ், மின்சாரம், மருத்துவம், மனிதவள மேம்பாடு, யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் சிறப்பு பயிற்சி அளித்தனர்.
தற்காலிக பயிற்சி மைய வளாகத்தில் 141வது தீயணைப்போர் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. மதுரை மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்மண்டல துணை இயக்குநர் ராஜேஷ்கண்ணன் பயிற்சி முடித்தவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, தீயணைப்பு துறையில் திறம்பட செயல்படுமாறு அறிவுரை வழங்கினார்.
மாவட்ட அலுவலர்கள் ஜெகதீஷ் (தேனி), சந்திரகுமார் (விருதுநகர்), உதவி மாவட்ட அலுவலர்கள் திருமுருகன் (மதுரை), குமரேசன் (தேனி), செந்தில்குமார் (சிவகங்கை) உள்ளிட்டோர் பயிற்சி முடித்தவர்களை வாழ்த்தினர்.