/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோழவந்தானை சோதிக்கும் போக்குவரத்து கழகம்
/
சோழவந்தானை சோதிக்கும் போக்குவரத்து கழகம்
ADDED : ஆக 15, 2025 02:46 AM
சோழவந்தான்: சோழவந்தான் பகுதியில் போதிய அரசு பஸ்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படாத நிலையில், பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து இயங்கிய பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பரிதவிக்கின்றனர்.
சோழவந்தானில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மைய பகுதியாக விளங்கும் சோழவந்தானில், தற்போது போதுமான பஸ்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை. அடிக்கடி பஸ்களின் ட்ரிப்புகள் 'கட்' செய்யப்படுகின்றன.
பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சோழவந்தான் வழியாக வட காடுபட்டி செல்ல அதிகாலை 4:30 மணிக்கு முதல் பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ், மதுரை டெப்போவில் இருந்து சோழவந்தான் டெப்போவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனால் பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து சோழவந்தானுக்கு முதல் பஸ் அதிகாலை 5:40 மணிக்கு இயக்கப்படுகிறது.
ஏராளமானோர் வெளி மாவட்டங்களில் இருந்து நள்ளிரவில் மதுரை வந்திறங்கி முதல் பஸ்சில் ஊருக்கு செல்வர். தற்போது இவர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. அடுத்து மதுரை டெப்போவில் இருந்து குருவித்துறைக்கு இயங்கிய பஸ் செக்கானுாரணி டெப்போவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது சோழவந்தானில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு இரவு 10:15 மணிக்கு இயங்கிய கடைசி பஸ். தற்போது இது பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் செக்கானுாரணி செல்கிறது. இதனால் சோழவந்தானில் இருந்து மதுரை செல்ல கடைசி பஸ் 9:45 மணியுடன் முடிந்து விடுகிறது. இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.