/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
28 இடங்களில் கலக்கும் கழிவு நீரால் கலங்குது வைகை
/
28 இடங்களில் கலக்கும் கழிவு நீரால் கலங்குது வைகை
UPDATED : நவ 22, 2024 07:36 AM
ADDED : நவ 22, 2024 04:34 AM

மதுரை: மதுரையில் வைகையில் கழிவு நீர் கலப்பு பிரச்னை தொடர்பாக மாநகராட்சி எடுத்த சர்வேயில் 28 இடங்களில் கழிவு நீர் கலப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடை திட்டங்கள் முடிவுற்ற பகுதியில் உள்ள 18 இடங்களில் கலப்பு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நகரின் நடுவே செல்லும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தனியார் தொண்டு நிறுவனம் சர்வே எடுத்தது. மதுரை நகர் பகுதியில் 64 இடங்களில் கழிவு நீர் கலப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் வைகை ஆற்றில் கலப்பு இடங்கள் தொடர்பாக தனியாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
அந்நிறுவனம் சார்பில் வைகையாற்றின் இருபுறங்களிலும் 41 இடங்களில் மேற்கொண்ட ஆய்வில் 28 இடங்களில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை அந்த நிறுவனம் மாநகராட்சிக்கு அளித்துள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வைகையாற்றுக்குள் கழிவுநீரை விடக்கூடாது என எச்சரித்து வருகிறோம். தனியார் தொண்டுநிறுவனம் மேற்கொண்ட ஆய்வையடுத்து உண்மை நிலவரம் குறித்து அந்த நிறுவனம் குறிப்பிட்ட இடங்களில் மேற்கொண்ட ஆய்வில், 28 இடங்களில் கழிவு கலப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் நகரில் பாதாளச் சாக்கடை பிரச்னைகள் சரிசெய்யப்பட்ட வார்டுகளுக்கு உட்பட்ட 18 இடங்களில் கழிவு நீர் கலப்பு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. மீதி இடங்களில் கழிவு நீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வுகாண திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நிதி ஒதுக்கிய பின் மாநகராட்சி பகுதிக்குள் வைகையாற்றுக்குள் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.