/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாமக்கல் வழியாக மைசூரு - துாத்துக்குடி விரைவு ரயிலை இயக்க வைகோ கோரிக்கை
/
நாமக்கல் வழியாக மைசூரு - துாத்துக்குடி விரைவு ரயிலை இயக்க வைகோ கோரிக்கை
நாமக்கல் வழியாக மைசூரு - துாத்துக்குடி விரைவு ரயிலை இயக்க வைகோ கோரிக்கை
நாமக்கல் வழியாக மைசூரு - துாத்துக்குடி விரைவு ரயிலை இயக்க வைகோ கோரிக்கை
ADDED : நவ 21, 2024 04:42 AM
மதுரை: மைசூரு - துாத்துக்குடி விரைவு ரயிலை ஈரோடு வழியாக இயக்காமல் நாமக்கல் வழியாக இயக்க ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி, சிவகாசி, ராஜபாளையம் ஊர்களில் வசிப்போர் பெங்களூரு செல்ல துாத்துக்குடி - மைசூரு விரைவு ரயிலை (16235) நம்பி உள்ளனர்.
மாலை 6:00 மணிக்கு குருவாயூர் - மதுரை பாசஞ்சரில் விருதுநகர் வந்து இரவு 7:00 மணிக்கு புறப்படும் மைசூரு ரயிலில் பெங்களூரு செல்வர். அதே போன்று விருதுநகர், மதுரை, திண்டுக்கல் பயணிகள் பெங்களூரு, மைசூரு செல்லவும் இந்த ரயிலே உள்ளது. இந்த ரயில் கரூர் - ஈரோடு - சேலம் வழியாக இயக்கப்படுகிறது.
ஈரோட்டில் இன்ஜின் திசை மாற்றப்படுவதால் 45 நிமிடம் வரை நேர விரயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மறுமார்க்கத்தில் மைசூரில் இருந்து மாலை 6:20 மணிக்கு புறப்படும் ரயில் (16236), மறுநாள் காலை 7:25 மணிக்கு தான் மதுரை வருகிறது. ஆனால் மதுரை - செங்கோட்டை பாசஞ்சர் காலை 7:10 மணிக்கு புறப்பட்டு சென்று விடுவதால் செங்கோட்டை வழி செல்லும் பயணிகள் 'கனெக்டிவிடி' ரயில் கிடைக்காமல் பஸ்களில் செல்கின்றனர்.
வைகோ தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 2003ல் செங்கோட்டையில் இருந்து பெங்களூருவிற்கு ரயில் இயக்க மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. இதுவரை இயக்கவில்லை. ஈரோட்டில் இருந்து கே.எஸ்.ஆர்., பெங்களூருவிற்கு 6 ரயில்கள் உள்ளன. மைசூரு - துாத்துக்குடி ரயிலை சேலத்தில் இருந்து ஈரோடு செல்லாமல் நாமக்கல் வழியாக நேர்வழியில் இயக்கினால் 40 கி.மீ துாரம் குறையும். கட்டணம் குறைவதுடன் நேரமும் மிச்சமாகும்.
சேலத்திற்கு அதிகாலை 2:00 மணிக்கு வரும் ரயில் நாமக்கல் வழியாக 3:45க்கு கரூர், 6:30 மணியளவில் மதுரைக்கு வந்துவிடும். இதனால் செங்கோட்டை வழி செல்லும் பயணிகள் காலை 7:10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் செங்கோட்டை பாசஞ்சரில் செல்ல முடியும். எனவே மைசூரு - துாத்துக்குடி ரயிலை ஈரோடு வழியாக இயக்காமல்நாமக்கல் வழியாக இயக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.