/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இளையோரிடம் அதிகரிக்கும் 'விட்டமின் டி' குறைபாடு
/
இளையோரிடம் அதிகரிக்கும் 'விட்டமின் டி' குறைபாடு
ADDED : அக் 21, 2025 05:02 AM
மதுரை: அதிக நேரம் 'ஏசி' அறையில் வேலை பார்க்கும் இளையோரிடம் 'விட்டமின் டி' குறைபாடு அதிகரித்து வருகிறது என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை அகச்சுரப்பியல் துறைத் தலைவர் டாக்டர் ஸ்ரீதர்.
அவர் கூறியதாவது:
சூரியஒளியில் உள்ள புறஊதாக்கதிர்கள் நமது தோலில் படும் போது விட்டமின் டி உற்பத்தியாகிறது. கல்லீரல், சிறுநீரகம் போன்றவை விட்டமின் டி உற்பத்திக்கு முக்கிய காரணங்கள். தோலில் இருந்து ரத்தநாளங்கள் வழியாக குடலுக்குச் சென்று அங்கிருந்து கல்லீரல், சிறுநீரகங்களுக்கு சென்று 'ஆக்டிவ் விட்டமின் டி' உருவாகிறது.
பால், பால் தொடர்பான பொருட்கள், முட்டைகோஸ், காலிபிளவரில் விட்டமின் டி அதிகமாக உள்ளது. சால்மன் மீனில் அதிகளவு விட்டமின் டி உள்ளது. மீன் எண்ணெய் மாத்திரைகளும் சாப்பிடலாம்.
குறைபாடு யாருக்கு வரும்
வெளியில் செல்லாமல் அறைக்குள்ளேயே இருக்கும் வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கும் விட்டமின் டி குறைபாடு வரலாம்.
குடல் பிரச்னை, கல்லீரல், சிறுநீரக நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு, வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை சாப்பிடுபவர்களுக்கு இப்பிரச்னை வரலாம். அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுபவர்களும் இத்தகைய அதிக 'ரிஸ்க்' வகை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை விட்டமின் டி ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும்.
கருப்பாக உள்ளவர்களுக்கு (டார்க் ஸ்கின்), சன் ஸ்கிரீன் கிரீம் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு விட்டமின் டி பற்றாக்குறை வரும் வாய்ப்பு அதிகம். ஏசி அறையில் வேலைபார்ப்பவர்கள், குளிர் பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு விட்டமின் டி பற்றாக்குறை ஏற்படும்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனை அகச்சுரப்பியியல் துறையில் விட்டமின் டி ரத்தப்பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. முழு உடல் பரிசோதனையிலும் இப்பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் விட்டமின் டி குறைபாடு கண்டறியப்பட்டால் கூடுதலாக கால்சியம் அளவையும் பாரா தைராய்டு ஹார்மோன் பரிசோதனையும் செய்ய வேண்டும்.
விட்டமின் டி அளவு 10 முதல் 20 வரை இருக்கலாம். அதற்கும் கீழே இருந்தால் பற்றாக்குறை என்று அர்த்தம். இதற்கான தீர்வும் எளிது தான். விட்டமின் டி மாத்திரை, மருந்துகள் உள்ளன. வாரத்திற்கு ஒருமுறை வீதம் எட்டு வாரங்களுக்கு எடுத்துக் கொண்டால் பற்றாக்குறை சரியாகும். இதனால் பக்கவிளைவு ஏற்படாது. சிலநேரங்களில் சத்து ஊசி என்ற பெயரில் மாதம் ஒருமுறை விட்டமின் டி மருந்தை செலுத்தும் போது விட்டமின் டி அதிகரிக்க வாய்ப்புள்ளது. டாக்டர் ஆலோசனையின்றி இதை பயன்படுத்தக்கூடாது.
அறிகுறிகள் என்ன
கை, கால் வலி, அதிக உடல் சோர்வு இருக்கலாம். எலும்பு வலி இருந்தால் விட்டமின் டி பரிசோதனை செய்வது அவசியம். சிறுவயதிலேயே எலும்பு முறிவு ஏற்பட்டாலும் பரிசோதனை செய்ய வேண்டும்.
சூரியஒளி நம் உடல் மேல் படுவது அவசியம். மதிய நேரத்தில் வரும் சூரிய ஒளியில் தான் அதிக விட்டமின் டி கிடைக்கும். ஆனால் உச்சிவெயிலில் நிற்பது கடினம். அதனால் குழந்தைகள், வயதானவர்களை கூடுமான வரை சூரியஒளியில் தினமும் சில நிமிடங்கள் நிற்கவும் வெயிலில் நடக்கவும் பழக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.