/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்களை கடைசி நேரத்தில் கைவிட்ட தி.மு.க., மா.செ.,க்கள் ராஜினாமா விவகாரம் பின்னணி என்ன
/
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்களை கடைசி நேரத்தில் கைவிட்ட தி.மு.க., மா.செ.,க்கள் ராஜினாமா விவகாரம் பின்னணி என்ன
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்களை கடைசி நேரத்தில் கைவிட்ட தி.மு.க., மா.செ.,க்கள் ராஜினாமா விவகாரம் பின்னணி என்ன
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்களை கடைசி நேரத்தில் கைவிட்ட தி.மு.க., மா.செ.,க்கள் ராஜினாமா விவகாரம் பின்னணி என்ன
ADDED : ஜூலை 11, 2025 05:19 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு புகார் எதிரொலியாக தி.மு.க., மண்டலத் தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதற்கு முன் அவர்களை காப்பாற்ற மாவட்ட செயலாளர்கள் (மா.செ.,) முயற்சி செய்ததும், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டுள்ளதால் பின்வாங்கியதும் தெரியவந்துள்ளது.
தமிழக மாநகராட்சி வரலாற்றில் முறைகேடு புகார் தொடர்பாக மண்டல தலைவர்கள் ஒரே நேரத்தில் கூண்டோடு ராஜினாமா செய்யப்பட்டது மதுரையில் தான். பதவியிழந்த சரவணபுவனேஸ்வரி, முகேஷ் சர்மா நகர் தி.மு.க., செயலாளர் தளபதி ஆதரவாளர்களாகவும், சுவிதா, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆதரவாளராகவும், பாண்டிச்செல்வி, அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளராகவும், வாசுகி, அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான மூர்த்தியின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர்.
இம்முறைகேடு புகார் விஸ்வரூபமெடுத்த நிலையிலும் அவர்களுக்கு மா.செ.,க்கள் ஆதரவு இருந்தது. இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை முதல் மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் நேரு விசாரணை வரை 'இது கட்சியின் வழக்கமான நடைமுறை தான். மேலிடத்தில் சொல்லி பார்த்துக்கொள்ளலாம்' என அவர்களுக்கு மா.செ.,க்கள் தரப்பு ஆறுதல் சொல்லி வந்தனர்.
விசாரணைக்கு பின் நேரு தரப்பிலும், 'உங்களிடம் பெற்ற ராஜினாமா கடிதங்கள் தலைமைக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் பின் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்' என்ற ரீதியில் தான் அவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
விசாரணைக்கு பின் அன்று இரவு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வெளியேறிய நேருவை சந்தித்த மண்டலத் தலைவர்களிடமும் அவர் ஆறுதலாக தான் பேசியுள்ளார்.
ஆனால் ஒன்றரை மணி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அனைத்து மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஒன்றரை மணிநேரத்தில் நடந்தது என்ன என்பது தான் புதிராக இருப்பதாக தி.மு.க.,வினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க., சீனியர் நிர்வாகிகள் கூறியதாவது: மதுரை மாநகராட்சி முறைகேடு தொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இது முதல்வர் ஸ்டாலின் நேரடி கவனத்திற்கு சென்றது. அப்போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் இருந்து விரிவான 'ரிப்போர்ட்' கேட்டு பெற்றுள்ளார். ஏற்கனவே கட்சியினர் சார்பிலும் ஆதாரங்களுடன் மண்டல தலைவர்கள், அவர்களை பாதுகாக்கும் கட்சி நிர்வாகிகள் குறித்தும் ஏராளமான புகார்களை அனுப்பியிருந்தனர். அத்துடன் போலீஸ் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டது.
இதில் சொத்துவரி முறைகேடு மட்டுமின்றி புதிய கட்டடங்களுக்கு வரைபட அனுமதி வழங்கியது, விதி மீறிய கட்டடங்களை காரணம் காட்டி வசூலித்தது, முக்கிய நிறுவனங்கள், பிரமுகர்களை மிரட்டி பணம் பெற்றது உட்பட பல வழிகளிலும் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே அ.தி.மு.க.,வும் இம்முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து போர்க்கொடி துாக்கியது. இதையெல்லாம் மனதில் வைத்து தான் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்திற்கு முன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டு அமைச்சர் நேருவை, முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு அனுப்பினார். அவர், ராஜினாமா கடிதங்கள் பெற்ற தகவலை தெரிவித்த அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் உத்தரவு வெளியானது.
'இதில் இருந்து தப்பிக்க அவர்கள் எந்த அமைச்சர், மா.செ.,க்களிடம் சிபாரிசுக்கு செல்கின்றனர் என்ற விஷயம் தலைமையால் கண்காணிக்கப்படுகிறது' என்ற தகவல் தெரிந்ததால் மா.செ.,க்களும் அவர்களை காப்பாற்றுவதில் இருந்து கடைசி நேரத்தில் பின்வாங்கினர். இவ்விவகாரத்தில் ஆளுங்கட்சியினருக்கான பங்கு குறித்த அறிக்கையும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றனர்.