UPDATED : நவ 20, 2026 07:16 PM
ADDED : நவ 20, 2026 07:16 PM

மேலுார்: மேலுார் ஒருபோக பாசன பகுதி கால்வாய்கள் பராமரிப்புக்கு ஒதுக்கிய நிதியை, அதற்கென செலவு செய்யாமல் முறையீடு செய்வதாக நீர்வளத் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.
கள்ளந்திரி - குறிச்சிப்பட்டி வரை பெரியாறு ஒரு போக பாசனத்தில் 85 ஆயிரத்து 843 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலங்களுக்கு 12 வது பெரியாறு பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இக்கால்வாய்களை பராமரிக்கவும், பழுது நீக்கவும் 13 பிரிவு அலுவலகங்களுக்கு ஆண்டுதோறும் எம் அண்ட் ஆர் திட்டத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் நீர்வளத்துறையினர் பராமரிக்கவில்லை.
விவசாயி ஸ்டாலின் கூறியதாவது: பாசன கால்வாய்களை பராமரிக்காததால் முட்கள், மரங்கள் வளர்ந்து சிலாப்புகள் முற்றிலும் சிதிலமடைந்து மண் தரையாக மாறிவிட்டது. ஒருபோகத்துக்கான தண்ணீரை பகிர்ந்தளிக்க விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியதால், அதிகாரிகள் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்கின்றனர். தண்ணீர் கடைமடை வரை செல்வதற்கு நீர்வளத் துறையினர் கால்வாய்களை பராமரிக்க வேண்டும். பராமரிப்புக்கென ஆண்டுதோறும் ஜூனில் ஒதுக்கும் நிதி ரூ. 2 கோடியை முறைகேடு செய்கின்றனர். இதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
