/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தை பிறந்தால் 'வழி' பிறக்கும் * முப்பது கி.மீ., மதுரை அவுட்டர் ரிங்ரோடு முதற்கட்ட பணிகள் * 2, 3ம் கட்டப் பணிகளையும் நிறைவேற்ற எதிர்பார்ப்பு
/
தை பிறந்தால் 'வழி' பிறக்கும் * முப்பது கி.மீ., மதுரை அவுட்டர் ரிங்ரோடு முதற்கட்ட பணிகள் * 2, 3ம் கட்டப் பணிகளையும் நிறைவேற்ற எதிர்பார்ப்பு
தை பிறந்தால் 'வழி' பிறக்கும் * முப்பது கி.மீ., மதுரை அவுட்டர் ரிங்ரோடு முதற்கட்ட பணிகள் * 2, 3ம் கட்டப் பணிகளையும் நிறைவேற்ற எதிர்பார்ப்பு
தை பிறந்தால் 'வழி' பிறக்கும் * முப்பது கி.மீ., மதுரை அவுட்டர் ரிங்ரோடு முதற்கட்ட பணிகள் * 2, 3ம் கட்டப் பணிகளையும் நிறைவேற்ற எதிர்பார்ப்பு
ADDED : நவ 21, 2025 03:28 AM

மதுரை: மதுரை அவுட்டர் ரிங்ரோடு அமைப்பதற்கான 30 கி.மீ., தொலைவுக்கான முதற்கட்ட பணிகள் வாடிப்பட்டி - சிட்டம்பட்டி இடையே 88 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. இப்பணிகள் ஜனவரிக்குள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.
மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண 1997ல் ரிங்ரோடு பணிகள் நடந்தன. கப்பலுார் முதல் மேலுார் ரோட்டில் மீனாட்சி மிஷன் வரை 27 கி.மீ.,க்கு முதற்கட்டமாக அமைக்கப்பட்டு தற்போது 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மற்றொரு புறம் மாட்டுத்தாவணி முதல் மூன்றுமாவடி, ஆனையூர், பாத்திமா கல்லுாரி வரையான ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை நகரின் விரிவாக்கம் வேகமாக அதிகரிப்பதால் அவுட்டர் ரிங்ரோடு ஒன்றும் தேவை என வாஜ்பாய் பிரதமராக இருந்த 1999ல் கருத்துருவாக்கம் ஏற்பட்டது. அப்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மூலம் ஏற்பாடுகள் நடந்தன.
இதற்கான பணிகள் 20 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்தன. 2020ல் வேகமெடுத்தது. முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) சார்பில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல் ரோட்டில், வாடிப்பட்டியில் துவங்கி மதுரை- - சென்னை நான்குவழிச்சாலையில் மேலுார் சிட்டம்பட்டி வரை 30 கி.மீ.,க்கு பணிகள் நடந்தன.
'அனிமல் பாஸ்' பாலம்
வாடிப்பட்டியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. அதை தொடர்ந்து தனிச்சியம், அலங்காநல்லுார், நத்தம், அழகர்கோவில், திருச்சி ரோடுகளில் மேம்பாலங்களுடன் நான்குவழிச்சாலையாக பணி நடந்துள்ளது. இதன் அகலம் 30 மீட்டர். இந்த ரோட்டில் வாடிப்பட்டியில் இருந்து 3வது கி.மீ.,யில் வனவிலங்குகள் ரோட்டை கடக்க 60 மீ., அகலம், 20 மீ., நீளத்திற்கு 'அனிமல் பாஸ்' எனும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு பணி 88 சதவீதம் முடிந்துள்ளது. இறுதிகட்டப் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளும் 2026 ஜனவரிக்குள் முடிவடைந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாவது கட்டம் எப்போது
இரண்டாவது கட்டமாக சிட்டம்பட்டியில் இருந்து பூவந்தி (சிவகங்கை ரோடு), மணலுார் (ராமநாதபுரம் ரோடு), பாறைப்பட்டி (அருப்புக்கோட்டை ரோடு), சிவரக்கோட்டை (நெல்லை ரோடு) வழியாக தென்காசி ரோட்டில் ஆலம்பட்டி வரை 52 கி.மீ.,க்கு ரோடு அமைய உள்ளது. இதற்கு விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்த நிலையிலேயே பல ஆண்டுகளாக உள்ளது. இனி திட்ட அறிக்கை பெற்று நிர்வாக அனுமதி வழங்கி, மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் விட்டு, நிலம் எடுப்பு பணிகள் மேற்கொள்ள பல ஆண்டுகள் ஆகும்.
மூன்றாம் கட்டமாக
ஆலம்பட்டியில் இருந்து கருமாத்துார், விக்கிரமங்கலம், இரும்பாடி, கருப்பட்டி, சோழவந்தான் வழியாக வாடிப்பட்டியில் சேரும் வகையில் 30 கி.மீ., அமைக்க கருத்துருவாக்க நிலையில்தான் உள்ளது. இதற்கிடையே கன்னியாகுமரி - காஷ்மீர் நெடுஞ்சாலையில் கப்பலுார் முதல் வாடிப்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக செல்வதால் இப்போதைக்கு மூன்றாம் கட்ட ரோடு குறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்படாமல் உள்ளன. காலமாற்றத்தை கணக்கில் கொண்டு மூன்று கட்டப் பணிகளையும் விரைந்து முடிப்பதன் மூலம் மதுரையின் வளர்ச்சி, வேகம் பிடிக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

