/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரிமாண்ட் கைதிகளின் ஸ்கேன் பரிசோதனை கட்டணத்தை யார் வழங்குவது
/
ரிமாண்ட் கைதிகளின் ஸ்கேன் பரிசோதனை கட்டணத்தை யார் வழங்குவது
ரிமாண்ட் கைதிகளின் ஸ்கேன் பரிசோதனை கட்டணத்தை யார் வழங்குவது
ரிமாண்ட் கைதிகளின் ஸ்கேன் பரிசோதனை கட்டணத்தை யார் வழங்குவது
ADDED : நவ 17, 2024 05:55 AM
மதுரை: அரசு மருத்துவமனைகளில் ரிமாண்ட் கைதிகளுக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது அதற்குரிய கட்டணத்தை யார் செலுத்துவது என்பதில் மருத்துவமனை, போலீசார் இடையே கருத்துவேறுபாடு ஏற்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை இலவசம் என்றாலும் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மற்றும் பெட் ஸ்கேன் பரிசோதனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். எக்ஸ்ரே பிலிம் ஆக வாங்க விரும்பினால் ரூ.50, சி.டி., ஸ்கேன் பிலிமிற்கு ரூ.500, எம்.ஆர்.ஐ., பரிசோதனைக்கு ரூ.2500 என தமிழ்நாடு மருந்து சேவை கழகம் (டி.என்.எம்.எஸ்.சி.,) கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் பதிவெண் பராமரிக்கப்பட்டு தினமும் எத்தனை பேருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என கணக்கிட்டு அதற்குரிய தொகையை மருந்து சேவை கழகத்திற்கு செலுத்த வேண்டும்.
விபத்தில் அடிபட்டு அவசர சிகிச்சை செய்ய நேர்ந்தாலோ, மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தாலோ அவர்களுக்கு சி.டி. பரிசோதனை செய்ய டீன் அனுமதியின் பேரில் கட்டணமின்றி ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. தினமும் ஒரு சதவீதம் பேருக்கு இலவச அனுமதி என டீனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் ஒன்றிரண்டு ரிமாண்ட் கைதிகளுக்கு கட்டணமின்றி பரிசோதனை செய்ய நேரிடுவதால் கணக்கு தணிக்கையில் பதில் சொல்ல வேண்டியுள்ளது என்கின்றனர் டாக்டர்கள்.
அவர்கள் கூறியதாவது: அனைத்து அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒரு சதவீதம் பேருக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரிமாண்ட் கைதிகளும் சில நேரங்களில் சி.டி. பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான கட்டணம் ரூ.500 ஐ போலீசாரும் வழங்குவதில்லை. இலவசம் என்ற பெயரில் கூடுதல் சுமையாக மாற்றப்படுகிறது.
சில கைதிகள் தலைவலி, வயிற்று வலி என்று சொல்லும் போது சி.டி. பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிலர் உண்மையாகவே பாதிக்கப்பட்டிருந்தால் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு பின் நோயின் தன்மையை உறுதிபடுத்த டாக்டர்களே சி.டி., பரிசோதனைக்கு பரிந்துரைப்பர். இன்னும் சிலருக்கு வயிறு, மூளை பிரச்னை இரண்டும் இருந்தால் சி.டி., அப்டெமன், சி.டி., பிரெயின்' பரிசோதனை தனித்தனியாக எடுக்க வேண்டும்.
ரிமாண்ட் கைதிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை இலவசம் என உள்துறை செயலர் மூலம் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்திற்கு போலீசார் பரிந்துரை கடிதம் வாங்கி கொடுத்தால் இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்றனர்.