/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழக அரசின் 'டிபாசிட்கள்' கூட்டுறவுத்துறைக்கு வராதது ஏன் கூட்டுறவு வங்கிகளை புறக்கணிப்பது சரியா
/
தமிழக அரசின் 'டிபாசிட்கள்' கூட்டுறவுத்துறைக்கு வராதது ஏன் கூட்டுறவு வங்கிகளை புறக்கணிப்பது சரியா
தமிழக அரசின் 'டிபாசிட்கள்' கூட்டுறவுத்துறைக்கு வராதது ஏன் கூட்டுறவு வங்கிகளை புறக்கணிப்பது சரியா
தமிழக அரசின் 'டிபாசிட்கள்' கூட்டுறவுத்துறைக்கு வராதது ஏன் கூட்டுறவு வங்கிகளை புறக்கணிப்பது சரியா
ADDED : டிச 28, 2025 06:12 AM
மதுரை: பல்வேறு திட்டங்களுக்காக தமிழக அரசு ஒதுக்கும் நிதி அனைத்தும் தேசிய, தனியார் வங்கிகளில் மட்டும் 'டிபாசிட்' செய்யப்படுகிறது. கூட்டுறவுத்துறை வங்கிகளை அரசே புறக்கணிக்கிறதா என கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 9வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. மாநிலத் தலைவர் தமிழரசு, கவுரவ தலைவர் சவுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் சர்வேஸ்வரன், பெபி பொதுச்செயலாளர் ரவிக்குமார், வெங்கடேசன் எம்.பி., கலந்து கொண்டனர்.
மாநில பொதுச் செயலாளர் சர்வேஸ்வரன் பேசியதாவது: தமிழக அரசின் திட்டங்களுக்கான முதலீடுகள் அனைத்தும் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகளில் தான் டிபாசிட்களாக்கப்படுகிறது. கூட்டுறவுத்துறையின் கீழ் தமிழகத்தில் 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் 950 கிளைகள், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் 60 கிளைகள் செயல்படுகின்றன. மாநில வங்கிகளில் 'நெட்பேங்கிங்' வசதிகளும் உள்ளன.
அரசின் உத்தரவுக்கேற்ப கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி, வட்டி மானியத் தொகை அனைத்தையும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் வழங்குகின்றன. மத்திய அரசு வட்டி மானியத்திற்கான ஒன்றரை சதவீதத் தொகையை உடனடியாக வழங்குகிறது. தமிழக அரசு ஒன்றிரண்டு ஆண்டுகள் தாமதமாகத் தான் அத்தொகையை விடுவிக்கிறது. இதுவே கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சியடையாததற்குக் காரணம்.
புறக்கணிப்பு சரியா கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் உறுப்பினர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். அவர்களை மேம்படுத்துவதற்கு கூட்டுறவு வங்கிகளை முதலில் பலப்படுத்த வேண்டும். கூட்டுறவுத்துறை செயலராக ராதாகிருஷ்ணன் இருந்தபோது, ' கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யுங்கள் என எல்லா கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பினார்'. ஆனால் கலெக்டர்களோ, கூட்டுறவுத்துறை உயரதிகாரிகளோ அதை கண்டுக் கொள்ளவில்லை. தள்ளுபடித் தொகை, வட்டி மானியம் தாமதம் என தமிழக அரசு எவ்வளவு நெருக்கடி கொடுத்த போதிலும், கடந்தாண்டில் 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மட்டும் ரூ.300 கோடி லாபம் ஈட்டியது. மாநில தலைமை கூட்டுறவு வங்கிகள் ரூ.180 லாபம் ஈட்டியது. இந்த லாபம் கூட்டுறவு சங்கங்களுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் தான் செல்லும்.
தற்போது தேசிய வங்கிகளைத் தாண்டி தனியார் வங்கிகளில் அரசின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. எனவே தமிழக அரசின் திட்டங்களுக்கான நிதியில் 50 சதவீதத் தொகையை கூட்டுறவு வங்கிகளில் டிபாசிட் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசே உத்தரவிட வேண்டும் என்றார்.

