/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
‛ஹேப்பி டெலிவரி' திட்டம் விரிவுபடுத்தப்படுமா? * தமிழகத்தில் சென்னையில் அறிமுகம்
/
‛ஹேப்பி டெலிவரி' திட்டம் விரிவுபடுத்தப்படுமா? * தமிழகத்தில் சென்னையில் அறிமுகம்
‛ஹேப்பி டெலிவரி' திட்டம் விரிவுபடுத்தப்படுமா? * தமிழகத்தில் சென்னையில் அறிமுகம்
‛ஹேப்பி டெலிவரி' திட்டம் விரிவுபடுத்தப்படுமா? * தமிழகத்தில் சென்னையில் அறிமுகம்
ADDED : செப் 26, 2024 10:44 PM
மதுரை:சென்னை கஸ்துாரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் கொண்டு வரப்பட்ட, 'ஹேப்பி டெலிவரி' திட்டத்தை தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப்பேறு நிகழ்வு அதிகரித்துள்ளதால் அதை குறைத்து சுகப்பிரசவத்தை அதிகரிக்கும் வகையில் தேசிய சுகாதார இயக்கம் மூலம் சென்னை கஸ்துாரிபா மருத்துவமனையில் ஆறு மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
அனைத்து மாவட்ட யோகா மருத்துவர்கள், நர்ஸ்கள், அலோபதி டாக்டர்கள் தலா இருவருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இத்திட்டத்தை மற்ற மாவட்டங்களில் விரைந்து செயல்படுத்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:
இத்திட்டம் பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கர்ப்பிணியருக்கு துவக்க நிலையிலேயே ஜிம் பந்து, நிலக்கடலை வடிவபந்து, தொட்டில் போன்ற கயிறு மூலம் உடல் இயக்க அசைவுகள், பிறப்புறுப்பு பாதையை விரிவுபடுத்துவதற்கான எளிய பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
எளிய, சத்தான உணவுகள் குறித்த விழிப்புணர்வு, கர்ப்பிணியை மனஅழுத்தமின்றி சந்தோஷமாக வைத்துக் கொள்வது குறித்து அவரின் தாய் மற்றும் கணவருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
விலங்குகள் நின்ற நிலையில் பிரசவிக்கின்றன. வெளிநாடுகளிலும் கர்ப்பிணியருக்கு பிடித்த நிலையில் பிரசவம் ஆவதற்கு அனுமதிக்கின்றனர். இங்கு பெரும்பாலும் படுத்த நிலையில் தான் பிரசவம் செய்யப்படுகிறது.
இனிமேல் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிடித்த நிலையில் பிரசவம் நடப்பதையும் இத்திட்டம் உறுதி செய்கிறது. பிரசவ காலத்தை சுமையாகவோ, நோயாகவோ பார்க்காமல் சந்தோஷமாக சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற வைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற 'மிட்வைப்' நர்ஸ்களுக்கும் வண்ணச் சீருடை தரப்பட்டுள்ளது. பிரசவ அறை, தயாராகும் அறையில் வண்ண பெயின்டிங், அரோமா வாசனை தரும் எண்ணெய் பூச்சு, பிரசவ நேரத்தில் மனதுக்கு பிடித்தமான டிவி, திருமண வீடியோ பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணியர் சந்தோஷ மனநிலையுடன் குழந்தைப்பேறுக்கு தயாரானால் பிறக்கும் குழந்தை சிறப்பான சிந்தனையுடன் வளரும். அடுத்த தலைமுறை சமுதாயம் ஆரோக்கியமானதாக மாறும். அதனால், இத்திட்டத்தை அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் அதிக குழந்தைப்பேறு நடக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

