/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கு கிடைக்குமா... பிள்ளையார் சுழி
/
மதுரையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கு கிடைக்குமா... பிள்ளையார் சுழி
மதுரையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கு கிடைக்குமா... பிள்ளையார் சுழி
மதுரையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கு கிடைக்குமா... பிள்ளையார் சுழி
ADDED : ஆக 26, 2025 04:07 AM

மதுரை: மத்திய அரசின் கொள்கைப்படி மருத்துவக்கல்லுாரியோடு இணைந்த அரசு மருத்துவமனையில்தான் புற்றுநோய் மண்டல மையம் அமைக்க வேண்டும் என்பதால் மதுரை பழைய ராமநாதபுர கலெக்டர் அலுவலக வளாகத்தை, புற்றுநோய் மண்டல மையமாக மாற்ற கலெக்டர் பிரவீன்குமார் மனது வைக்க வேண்டும். மத்திய அரசு நிதி வழங்கும் போது மையத்தை நன்றாக செயல்படுத்தலாம்.
மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை, ஹீமோதெரபி சிகிச்சை உள்ளது. இதை தாண்டிய பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. ஒருங்கிணைந்த முறையில் நியூக்ளியர் மெடிசன், பெட் ஸ்கேன், இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி, மயக்கவியல் துறையின் வலிநீக்க சிகிச்சைகளும் சேர்ந்து தான் புற்றுநோய் சிகிச்சையாக முழுமை பெறுகிறது. மேலும் அறுவை சிகிச்சையின் போது 'பேதாலஜி' துறை டாக்டர்களும் இருக்க வேண்டும்.
எந்த செல் புற்றுநோய்க்குரியது என்பதை உடனுக்குடன் ஆய்வு செய்து சொல்லும் போது அறுவை சிகிச்சை நிபுணர்கள் துல்லியமான அறுவை சிகிச்சை செய்ய முடியும். இந்த வசதிகள் அனைத்தும் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளன. ஆனால் பாலரெங்காபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் ரேடியேசன் தெரபி மட்டுமே உள்ளது. மக்கள் நெருக்கடி அதிகமான இந்த இடத்தில் பஸ்வசதி இல்லை. இந்த ஒரு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வர வேண்டியுள்ளது. தென்மாவட்ட நோயாளிகளுக்கும் இதுதான் சிகிச்சை மையமாக உள்ளது.
மத்திய அரசு கொள்கைபடி புற்றுநோய் மண்டல மையம் ஆரம்பிப்பதற்கான நிதி ஒதுக்கும் போது ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லுாரியோடு இணைந்த அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் தான் செயல்படுத்த வேண்டும் என்றுள்ளது. இதற்கு அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் இருப்பதே சாத்தியம். எனவே மருத்துவக் கல்வியோடு இணைந்த மருத்துவமனையில் தான் இந்த கட்டடத்தை கொண்டு வரவேண்டும். மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரேடியேசன் தெரபி தவிர அனைத்து துறைகளும் செயல்படுகின்றன. இவற்றை ஒருங்கிணைப்பது தான் வேலை. இதற்கென தனியிடம் வேண்டும். மதுரை பழைய ராமநாதபுர அலுவலக வளாகத்தில் ஒன்றிரண்டு அரசு துறைகள் தான் இயங்குகின்றன. மீதி கட்டடம் பராமரிப்பின்றியும் பின்பக்கம் சமூக விரோதிகளின் இருப்பிடமாகவும் உள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அடுத்துள்ள இந்த இடத்தில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மண்டல மையம் ஆரம்பிக்கலாம். உடனடியாக பல நுாறு கோடிகள் செலவிட வேண்டியதில்லை. தேவையான கட்டடத்தை மட்டும் கட்டிய பின் மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது எளிதாக இருக்கும். பல ஆண்டுகளாக இந்த கட்டடத்தை மருத்துவமனை நிர்வாகம் கேட்டு வரும் நிலையில், கலெக்டர் பிரவீன்குமார் மனது வைத்தால் நடக்கும்.