UPDATED : நவ 10, 2026 07:27 PM
ADDED : நவ 10, 2026 07:23 PM
மதுரை: பிற மாநிலங்கள் போல் சிறப்பு 'டெட்' தேர்வு தமிழகத்திலும் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 2028, ஆக.31க்குள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தமிழகத்தில் ஜூலையில் முதல் சிறப்பு 'டெட்' தேர்வு நடந்தது. இதில் வினாத்தாள் கடினமாக இருந்ததால், தாள் 2ல் பட்டதாரி ஆசிரியர் 50 சதவீத்திற்கும் மேல் தோல்வியடைந்தனர்.
தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியலை முதன்மை பாடமாக கொண்டோருக்கான வினாத்தாளில் பிற பாடங்களில் இருந்து அதிக வினாக்கள் இடம் பெற்றதால் அதிக தோல்வி ஏற்பட்டது.
ஆசிரியர்கள் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியில் உள்ளோர் தேர்வு எழுதுவதால் கேரளம், மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, மேகலாயா உட்பட பல மாநிலங்களில் இத்தேர்வு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு, வினாத்தாளில் எளிமை, பாடத் திட்ட விபரம் வெளியீடு, பள்ளி ஆசிரியர் மூலம் வினாத்தாள் தயாரிப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் டிசம்பரில் நடக்கும் தேர்வை தமிழகத்திலும் எளிமைப்படுத்த வேண்டும் என்றனர்.
