/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை - அபுதாபி விமானம் தொடர வழி; தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் ஆதரவு தேவை
/
மதுரை - அபுதாபி விமானம் தொடர வழி; தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் ஆதரவு தேவை
மதுரை - அபுதாபி விமானம் தொடர வழி; தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் ஆதரவு தேவை
மதுரை - அபுதாபி விமானம் தொடர வழி; தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் ஆதரவு தேவை
ADDED : மே 16, 2025 06:24 AM

மதுரை : மதுரை டூ சிங்கப்பூர் சேவையை பாதியில் நிறுத்தியது போலன்றி மதுரை - அபுதாபி விமான சேவை தொடர்ந்து இயங்க வேண்டும் எனில் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட சுற்றுலா பயணிகள், தொழிலாளர்கள் ஆதரவு முழுமையாக தேவை.
மதுரையில் இருந்து துபாய், இலங்கைக்கு விமான சேவை உள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சிங்கப்பூர்சேவை வழங்கியநிலையில் பயணிகளிடம் வரவேற்பில்லாத காரணத்தால் கடந்த மாதம் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது ஜூன் 13 முதல் வாரத்தில் 3 நாட்கள் மதுரையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் துபாய், அபுதாபி, அரபு நாடுகளில் அதிகளவில் வேலை செய்கின்றனர். தற்போது மதுரையில் இருந்து துபாய் செல்வதற்கான வாய்ப்பு எளிதாகி விட்டது. இதையடுத்தே மதுரை டூ அபுதாபி செல்வதற்கான சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை நிரந்தரமாக தக்க வைக்க வேண்டும் எனில் தென்மாவட்ட தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகளின் ஆதரவு நிரந்தரமாக தேவை என்கிறார் தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார்.
அவர் மேலும் கூறியதாவது:சிங்கப்பூரில் உள்ள சென்ட் தீவு, மலேசியாவில் ஜென்டிங் தீவு ஆகியவை போல அபுதாபியிலும் 'யாஷ் தண்ணீர் விளையாட்டு தீவு' சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும்.மத்தியஅரசு சார்பில் சமீபத்தில் பிரதமர் மோடி புதிதாக ஹிந்து கோயிலை கட்டி திறந்துள்ளார். மிகப்பெரியமசூதி, பெராரி வேர்ல்டு எனப்படும் எப்.1 ரேஸ் காட்சிக் கூடம், தீம் பார்க் ஆகியவை உள்ளன. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் சிறு சிறு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
நமக்கான சவால் என்னவென்றால் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை மதுரை டூ அபுதாபி விமான சேவையின் பயணிகள் வரவை கணக்கெடுக்கப்படும். பயணிகள் வருகை குறைந்து விட்டால் சிங்கப்பூர் சேவையைப் போல அபுதாபி சேவையும் நிறுத்தப்பட்டு விடும். தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் 180 இருக்கைகளுடன் இந்த சேவை துவங்கப்பட உள்ளது.
தொழிலாளர்கள் அதிகம் செல்வது, சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வது, பிசினஸ், ஏற்றுமதி போன்றவற்றின் மூலம் மதுரை - அபுதாபி சேவையை நிரந்தரமாக்கலாம். மதுரையை பன்னாட்டு விமான சேவையாக மாற்றுவது தென்மாவட்ட மக்களின் கையில் தான் உள்ளது என்றார்.