மதுரை: மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் 43ம் உலக கவிஞர்கள் மாநாடு நேற்று துவங்கியது. சேது பாஸ்கரா கல்விக்குழுமத் தலைவர் சேதுகுமணன் தலைமை வகித்தார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், ''இதுவரை மதுரையில் ஐந்து தமிழ்ச் சங்கங்கள் இருந்துள்ளன. இது 6வது தமிழ்ச் சங்கமாகும். இந்த மண்ணிலே தான் ஆன்மிகம், அறிவியலில் தமிழ், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் வழி மானுடத்தை போற்ற வேண்டும். வாழும்போது எல்லோரையும் பாராட்டும் பண்பு தமிழர்களுடையது'' என்றார்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், வி.ஜி.பி., குழுமத் தலைவர் சந்தோஷம், உலகத்தமிழ்ச்சங்க இயக்குநர் அவ்வை அருள் கலந்து கொண்டனர். கவிஞர் சேதுராமனுக்கு டாக்டர் கிருஷ்ணா சீனிவாசன் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது கே.ஐ.டி.டி., நிறுவனர் அச்சுதா சமன்தாவிற்கு வழங்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிறமாநிலங்களில் இருந்து கவிஞர்கள் கலந்துகொண்டனர். நவ.25 வரை இம்மாநாடு நடக்கிறது.